கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்றுவரும் விவசாயிகளின் வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டம் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடும்படி விவசாயிகள் தூண்டப்படுவதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவரும் பட்ஜெட் கூட்டதொடரின் ஆறாவது நாளான இன்று மாநிலங்களவையில் பேசிய நரேந்திர சிங் தோமர், "குறிப்பிட்ட ஒரு மாநிலத்தை சேர்ந்த விவசாயிகளே வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்கள் தூண்டப்பட்டுவருகின்றனர்.
மூன்று வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக ஒரு குறையை கூட விவசாய சங்ககளாலோ எதிர்கட்சியினராலோ சுட்டிகாட்ட முடியவில்லை. மத்திய அரசும், பிரதமர் மோடியும் விவசாயிகளின் நலனில் உறுதிப்பூண்டுள்ளனர். நாங்கள் கவுரவத்திற்காக பிடிவாதம் பிடிக்கவில்லை. சட்டத்தில் இருக்கும் தவறான அம்சங்களை சுட்டிக்காட்ட கேட்டு கொண்டோம். ஆனால், யாரும் முன்வரவில்லை” என்றார்.
வேளாண் திருத்த சட்டங்களை நீக்க வேண்டும் எனக் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்திவருகின்றனர். புதிய திருத்த சட்டங்களால் குறைந்தபட்ச ஆதார விலை நீக்கப்படும், பெரு முதலாளிகளால் சுரண்டப்படுவோம் என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.