ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முரளி. இவர் திருப்பதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துவருகிறார். டிக் டாக் காணொலி மீது மோகம் கொண்ட முரளி டிக் டாக் எடுப்பதற்காக சேஷாசலம் வனப்பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த மலை உச்சிக்குச் சென்ற அவர் தேசியக் கொடியை நட்டுவைத்து இயற்கை காட்சிகளை தனது கைப்பேசியில் படம் பிடித்துள்ளார்.
பின்னர் டிக் டாக்கில் காணொலி எடுப்பதற்காக வனப்பகுதியில் சரியான இடத்தை தேடிச்சென்றுள்ளார். அப்போது வழிதவறி அடர் வனப்பகுதியில் சிக்கிக்கொண்டார். இதையடுத்து, முரளி உடனே தனது நண்பர்களுக்கு கைப்பேசியில் தான் இருக்கும் இடத்தை பகிர்ந்துள்ளார்.
இதனையடுத்து நண்பர்கள் அளித்த தகவலின் பேரில், சந்திரகிரி காவல் துறையினர் வனப்பகுதியில் முரளியை தேடினர். சில மணிநேர போரட்டத்திற்கு பின் அவரை காவல் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், காட்டில் சில மணிநேரம் தனியாக சிக்கிக்கொண்ட முரளி மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளோம். மேலும் இது போன்ற செயல்களில் மாணவர்களும் இளைஞர்களும் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.
சில தினங்களுக்கு முன் குஜராத்தில் காவல் நிலையம் ஒன்றில் மஃப்டியில் பணியிலிருந்த பெண் காவலர் ஒருவர் டிக் டாக்கில் காணொலி ஒன்றை பதிவிட்டார். அந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகவே அவரிடம் காவல் துறை உயர் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.