உலகெங்கும் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. மனிதர்களைத் தவிர மற்ற விலங்குகளுக்கு இந்தத் தீநுண்மி தொற்று பரவுமா இல்லையா என்பது குறித்து இதுவரை உறுதியான ஆராய்ச்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் சத்பீர் உயிரியல் பூங்காவிலுள்ள புலி ஒன்று கடந்த சில நாள்களாகக் குறைவான அளவே உணவை எடுத்துக்கொண்டது. மேலும், அந்தப் புலி நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டது. இதனால் அதற்குக் கோவிட்-19 தொற்று இருக்குமோ என்று கருதி பூங்கா ஊழியர்கள் புலியைத் தனிமைப்படுத்தினர்.
புலிக்கு கோவிட்-19 தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய பூங்கா ஊழியர்கள் மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்டனர். ஏப்ரல் 22ஆம் தேதி மருத்துவப் பரிசோதனைக்காகப் புலியின் உமிழ்நீர் மாதிரிகள் அனுப்பப்பட்டதாகவும் ஏப்ரல் 23ஆம் தேதி பரிசோதனையின் முடிவில் புலிக்கு தீநுண்மி தொற்று இல்லை என்பதும் கண்டறியப்பட்டது.
முன்னதாக அமெரிக்காவிலுள்ள உயிரியல் பூங்காவில் புலி ஒன்றுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து டெல்லியிலுள்ள மத்திய உயிரியல் பூங்கா ஆணையம், நாடு முழுவதும் உள்ள உயிரியல் பூங்காக்களின் நிர்வாகங்களுக்கு, விலங்குகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தீநுண்மி தொற்றின் அறிகுறிகளுடன் இருக்கும் விலங்குகளைத் தனிமைப்படுத்தி மருத்துவப் பரிசோதனைக்குள்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: உதவியாளருக்கு கரோனா! அச்சத்தில் இருந்த தலைமை நீதிபதிக்கு கிடைத்த ஆறுதல்!