கோழிக்கோடு: வடக்கு கேரளாவின் வனப்பகுதியில் ஒரு யானைக்குட்டி உட்பட 3 யானைகள் உயிரிழந்துள்ளன. இதில் இரண்டு யானைகள் விபத்தில் சிக்கியதால் உயிரிழந்துள்ளன. யானைக்குட்டி இறப்புக்கான காரணம் தெரியவில்லை.
இதுகுறித்து வனத்துறை அலுவலர், பயன்படுத்தப்படாத கிணற்றில் விழுந்த 20 வயது பெண் யானை மீட்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் உயிரிழந்தது. சனிக்கிழமை இரவு அந்த யானை கிணற்றில் விழுந்துள்ளது. நாங்கள் அதை மீட்கும்போது மிகவும் வலுவிழந்து காணப்பட்டது. அதற்கு தேவையான அளவு தண்ணீர், உணவுகளை வழங்கினோம். ஆனால், கொஞ்சம் தூரம் நடந்ததுமே இறந்து விழுந்தது. அதன் உடலை உடற்கூராய்வுக்கு அனுப்பி, இறப்புக்கான காரணம் குறித்து அறியவுள்ளோம்.
அதேபோல் மக்னா யானை ஒன்று நிலம்பூர் அருகே விவசாய நிலத்தில் இறந்து கிடந்தது. அதன் மீது மின்சாரம் பாய்ந்திருக்கும் என சந்தேகிக்கிறோம். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
வயநாடு வனவிலங்கு சரணாலயத்தில் யானைக்குட்டி ஒன்று இன்று உயிரிழந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து வயநாடு வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அங்கு யானைக் கூட்டம் இருப்பதால் குட்டியானையின் உடலை நெருங்க முடியவில்லை என்றார்