உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பெருந்தொற்று இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. பிறந்த குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை, அனைத்துத் தரப்பு வயதினரும் இத்தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் கோரக்பூரில் மூன்று மாத ஆண் குழந்தை ஒன்றுக்கு, கரோனா வைரஸ் இருப்பது உறுதியானது.
குழந்தையும், தாயும் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவமனை கல்லூரியில் அனுமதிக்கப்பட்டபோது இருவருக்கும் கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அப்போது தாய்க்கு கரோனா வைரஸ் இல்லை என முடிவு தெரியவந்த நிலையில், குழந்தைக்குத் தொற்று இருப்பது உறுதியானது.
இந்நிலையில், அக்குழந்தை தாய்ப்பால் மட்டுமே குடித்து வந்ததால், தற்போது கரோனா வைரஸிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "குழந்தையை கரோனா வைரஸிலிருந்து குணப்படுத்துவது மட்டுமில்லாமல் நோய்த்தொற்று தாய்க்கு பரவாமல் பார்த்துக்கொள்வதிலும் மருத்துவர்களுக்குச் சவாலாக இருந்தது. தனிமைப்படுத்த வார்டில் அனுமதிக்கப்பட்டு அக்குழந்தையை அவரது தாயார் விதிகளைப் பின்பற்றி கவனித்துக்கொண்டார். முகக்கவசம் கையுறை அணிந்த பிறகே அவர் தனது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்தார்.
குழந்தையிடம் காய்ச்சல் தவிர, வேறு எந்த அறிகுறியும் தென்படவில்லை. குழந்தைக்கு காய்ச்சலுக்கான சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், தாய்ப்பால் மட்டுமே அருந்தி வந்த அக்குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்ததால் கரோனாவிலிருந்து பூரணமாக குணமடைந்தது.
நேற்று ( ஏப்ரல் 26), நேற்றைய முன் தினம் (ஏப்ரல் 25) இருநாள்களிலும் தாய், சேய் இருவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது இருவருக்கும் கரோனா இல்லை என ஆய்வின் முடிவில் தெரியவந்த பிறகே, அவர்கள் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்" என்றார்.
மேலும் வீட்டில் குழந்தையை கவனித்துக் கொள்ளும்போதும் விதிமுறைகளைப் பின்பற்றுமாறு தாயிடம் அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கரோனா வைரஸிலிருந்து குணமடைந்து தாய், சேய் இருவரும் நேற்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் போது, அவர்களுக்கு மருத்துவப் பணியாளர்கள், மாவட்ட நீதிபதி விஜயேந்திர பாண்டியன், கமிஷனர் ஜெயந்த் நர்லிக்கர் குமார் உள்ளிட்ட அலுவலர்கள் கைகளைத் தட்டி, பாராட்டி, வழி அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: கரோனாவின்போது எவ்வாறு தாய்ப்பால் ஊட்ட வேண்டும்? - தேசிய சுகாதார நிறுவனம் அறிவுரை