ஆந்திர மாநிலத்தில் சட்டவிரோதமாக மது பானம், மணல், போதைப் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக அம்மாநில அரசு போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்புப் பிரிவை அமைத்தது. அதனடிப்படையில், எல்லைப் பகுதிகளில் சட்டவிரோதமாக விற்கப்படும் மதுபானங்களை பறிமுதல் செய்து வருகிறது. அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் மது பாட்டில்கள் காவல் நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்டு தனி அறைகளில் வைக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், அனந்தபுரம் மாவட்டம், இந்துபூர் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை பிரித்து மூன்று காவலர்கள் மது அருந்தும் காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மூன்று காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து இந்துபூர் வட்டக் காவல் ஆய்வாளர் மன்சூரிதின் கூறியதாவது, ”மூன்று காவலர்களும் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், சம்பவம் நடந்த தேதி குறித்து இன்னும் விசாரிக்கப்படவில்லை. மது அருந்திய திருமலேஷ், கோபால் மற்றும் நூர் அகமத் ஆகிய மூன்று பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருப்பதி கோவிலில் காவலாளி பணி பெற்றுத் தருவதாக ராணுவ வீரரிடம் ரூ. 80 லட்சம் மோசடி