சரியாக பாதுகாக்கப்படாததால் நாம் பல அரிய வகை விதைகளை இழந்துவிட்டோம். அதில் பலவற்றின் பெயர்கூட நமக்கு தெரியாது. அசாம் எலுமிச்சை, சிவப்பு முள்ளங்கி, காஷ்மீர் பூண்டு என இந்தப் பட்டியல் நீளுகின்றன. இப்படியான சூழலில், ஷ்ருதி அருண் ஓஜா எனும் அறிவியல் இளங்கலை மாணவி தன்னால் முடிந்த அளவு அரிய வகை விதைகளை பாதுகாத்து வருகிறார்.
ஷ்ருதியின் குடும்பம் விப்ரா நகர் பகுதியில் வசித்து வருகிறது. அவரது தந்தை கொரியர் தொழில் செய்துவருகிறார், தாயார் இல்லத்தரசியாக உள்ளார்.
ஷ்ருதியின் தந்தைக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம்கூட கிடையாது. ஆனால், ஷ்ருதி மண்ணுக்கு நெருங்கிய தொடர்பில் இருப்பதை, அவர் அரிய விதைகளை சேகரிப்பதன் மூலம் நாம் உணர முடிகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளார்.
நாட்டிலுள்ள அரிய விதைகளை பாதுகாக்க தனித்துவமான முயற்சியை மேற்கொண்டுள்ள ஷ்ருதி, இதுவரை 18 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தபால் மூலம் விதைகளை அனுப்பியுள்ளார்.
250 வகையான அரிய விதைகள்
அனைவரும் மஞ்சள் செடி பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஷ்ருதியிடம் ஊதா மஞ்சள் எனப்படும் பர்புல் டர்மரிக் உள்ளது. அதேபோல் மிளகாயிலும் இனிப்பு வகையை சார்ந்த விதையை வைத்திருக்கிறார். அசாம் எலுமிச்சை, சிவப்பு முள்ளங்கி, காஷ்மீர் பூண்டு என பல வகையான அரிய விதைகள் அவர் கைவசம் உள்ளன.
விதைகளை திரும்ப அளிக்கும் கொள்கை
ஷ்ருதியின் தனித்துவமான யோசனையால், சாதாரண குடிமக்களும் விவசாயிகளும் 250 முதல் 300 வகையான விதைகளை பயன்படுத்த முடியும். நீங்கள் கொடுக்கும் விதைகளுக்கு இரு மடங்கான விதைகளை ஷ்ருதி ஒரே ஆண்டில் திருப்பி தருகிறார். அதற்கான தபால் கட்டணத்தை மட்டும் அவர் பெற்றுக் கொள்கிறார்.
விவசாய நிலமற்ற ஷ்ருதியின் குடும்பம், இந்த விதைகளை அதிகளவு நட முடியவில்லை. அரசாங்கமும், மாவட்ட விவசாயத் துறையும் உதவும் பட்சத்தில் இந்த விதைகளை அதிக அளவு புழக்கத்தில் கொண்டுவர முடியும் என ஷ்ருதியின் தந்தை தெரிவிக்கிறார்.
இதையும் படிங்க: சங்ககாலக் கீழடியில் உடன்கட்டை ஏறுதல் பழக்கம்? - தொல்லியல் அறிஞர் சிறப்பு நேர்காணல்