திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் காவி உடையுடன் திருவள்ளுவர் படத்தை பதிவிட்டார். மேலும் 'சிறந்த தமிழ் புலவரும், தத்துவவாதியும், ஞானியுமான திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். அவர் நமக்கு அளித்த திருக்குறள் இந்த உலகில் உன்னதமான வாழ்க்கையை வாழ்வதற்கு மனித குலத்திற்கு வழிகாட்டுகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அதில், காவி உடை அணிவித்திருந்த திருவள்ளுவர் படத்தை அவர் முதலில் பதிவிட்டிருந்தார். இதை தமிழ்நாடு பாஜகவின் ட்விட்டர் பக்கமும் பகிர்ந்திருந்தது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக அந்தப்பதிவில் தனது கருத்தை பதிவு செய்த தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில் குமார், "தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படத்தை பயன்படுத்துங்கள். அவரை சாதியாலும் மதத்தாலும் சித்தரிக்கும் காவி உடை அணிந்த படத்தை தயவு செய்து நீக்குங்கள். திருவள்ளுவர் எல்லோராலும் கொண்டாடப்படுபவர்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதன்பின்பு சிறிது நேரத்திலேயே வெங்கையா நாயுடு காவி உடை அணிவித்திருந்த திருவள்ளுவர் படத்தை நீக்கிவிட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படத்தைப் பதிவிட்டார்.
இந்நிலையில் இது குறித்து வெங்கையா நாயுடு தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில், திருவள்ளுவர் காவி உடையணிந்த படத்தை அலுவலக ஊழியர் தவறுதலாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்ததும் நாங்கள் டெலிட் செய்துவிட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: எல்ஜிபிடி சமூகத்தினர்மீது இந்த சமூகம் களங்கம் கற்பித்துள்ளது - வேதனைத் தெரிவிக்கும் ஆயுஷ்மான்!