கேரள மாநிலத்தில் மீண்டும் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த இந்நபர், சுகாதாரத் துறையின் தீவிரக் கண்காணிப்பில் உள்ளதாகச் சுகாதார அமைச்சர் கே.கே. ஷைலாஜா சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
சீனாவின் வூஹான் மாகாணத்திலிருந்து அம்மாநிலத்திற்குத் திரும்பிய இந்நபர், தற்போது காசர்கோடு, கஞ்சன்காட் மாவட்ட மருத்துவமனையில் தனி அறையில் தீவிரக் கண்காணிப்பில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது உடல்நிலை தற்போதுவரை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக திரிசூர், ஆலப்புழாவைச் சேர்ந்த நபர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்புகள் உறுதிசெய்யப்பட்ட நிலையில், கரோனா வைரஸ் தாக்கப்பட்ட நபர்கள் குறித்த மொத்தம் 104 மாதிரிகள், இதுவரை புனே வைராலஜி நிறுவனத்திற்கு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
இதில் 36 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதிசெய்யப்பட்ட நிலையில், இரண்டு பேர் இந்த வைரஸால் தாக்கப்பட்டிருந்தது உறுதிசெய்யப்பட்டது.
தவிர, கரோனா வைரஸ் குறித்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றும், கேரள மாநில மக்கள் இது குறித்து அச்சம்கொள்ள தேவையில்லை எனவும் அமைச்சர் ஷைலாஜா தெரிவித்துள்ளார்.
மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளில், தனியார் மருத்துவமனைகளின் ஒத்துழைப்பும் உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவில் 2ஆவது நபருக்கு கரோனா!