அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தவர், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்பதே அந்த திருத்தம். மேலும், கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு குடும்பம், தனிநபர்களின் புள்ளிவிவரங்களை சேகரிக்கும் பணி ஏப்ரல் 1 முதல் ஆறு மாதங்கள் நடைபெற்று, என்பிஆர்( National Population Register) புதுப்பித்தல் பணிகள் நிறைவு பெறும் என மத்திய அரசு முன்னதாக அறிவித்தது.
இந்நிலையில் இது குறித்து மக்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'இதுகுறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை. தேசிய மக்கள்தொகை பதிவேடு புதுப்பிக்கும் பயிற்சியின்போது, எந்தவொரு குடிமகனும் 'டி' அல்லது 'சந்தேகத்திற்குரியவர்' என்று குறிக்கப்படமாட்டார் என்றும்; குடியுரிமையை நிரூபிக்க எந்த ஆவணங்களும் வழங்கப்பட வேண்டியதில்லை எனவும் கூறினார்.
மேலும் இது குறித்து சந்தேகம் இருந்தால் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், தன்னை வந்து சந்தித்து சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளவும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க...ரூபாயின் மதிப்பு தொடர் வீழ்ச்சி: அமெரிக்க டாலருக்கு எதிராக ரூ. 74.44 ஆக வர்த்தகம்.