சிவசேனா கட்சியின் மூத்தத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸை நேற்று முன் தினம் (செப்.26) மும்பையில் உள்ள ஓர் நட்சத்திர விடுதியில் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராவத், "நான் மகராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸை கோவிட் -19 பரவல் குறித்த ஆலோசனைக்காக சந்தித்தேன். அவர் நடைபெறவிருக்கும் பீகார் மாநிலத் தேர்தலுக்கு பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எங்களுடைய இந்தச் சந்திப்பு மறைமுகமானதல்ல. எங்கள் சந்திப்பு குறித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நன்கு அறிவார். பாஜகவிற்கும் சிவசேனாவிற்கும் இடையே கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் நாங்கள் ஒன்றும் விரோதிகள் அல்ல! சிவசேனா தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகியதுபோல தற்போது வேளாண் மசோதா விவகாரத்தில் அக்கூட்டணியில் இருந்து ஷிரோமணி அகாலிதள கட்சியும் விலகியுள்ளது.
1996ஆம் ஆண்டிலிருந்து ஷிரோமணி அகாலிதள கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வந்துள்ளது. என்னால் சிவசேனா, ஷிரோமணி அகாலிதளக் கட்சி இல்லாத தேசிய ஜனநாயகக் கூட்டணியை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாஜக தலைவர் வீட்டு முன் அக்கட்சி கொடியை தூக்கிலிட்டு போராட்டம் நடத்திய பெண் கைது!