கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு கே.எஸ்.ஆர்.டி.சி. சொகுசுப் பேருந்து நேற்றிரவு புறப்பட்டது. அந்தப் பேருந்தில் 48 பயணிகள் பயணித்துள்ளனர். அதேபோல கேரளாவிலிருந்து டைல்ஸ்களை ஏற்றிக்கொண்டு, ஒரு கண்டெய்னர் லாரி சேலம் நோக்கிச் சென்றுள்ளது.
இந்த இரண்டு வாகனங்களும் இன்று அதிகாலை திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே வந்துகொண்டிருந்தபோது நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்து இன்று அதிகாலை 3.15 மணிக்கு நடந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, காவல் துறை, தீயணைப்புத் துறை சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். முதல்கட்ட விசாரணையில், கண்டெய்னர் லாரியை ஓட்டிவந்த ஓட்டுநர், வண்டி ஓட்டும்போது கண் அயர்ந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் தடுப்புகளில் மோதி, எதிர் வழித்தடத்துக்குச் சென்றுள்ளது. லாரியைத் தொடர்ந்து கட்டுப்படுத்த முடியாததால், அது எதிரில் வந்த பேருந்து மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் திருச்சூரைச் சேர்ந்த இக்னி ரஃபேல் என்பவரும் உயிரிழந்தார். இவருடைய மனைவி வின்சி. இவர்களுக்குத் திருமணமாகி மூன்று வருடங்களாகின்றன. வின்சி செவிலியத் துறையில் படிப்பை முடித்துள்ளார்.
இந்நிலையில், ரஃபேல் தனது மனைவியின் கல்விச் சான்றிதழ்களை வாங்குவதற்காக வின்சியுடன் பெங்களூருவுக்குப் பயணித்துள்ளார். அங்கிருந்து, சான்றிதழ்களை வாங்கிவிட்டு இருவரும் திரும்பும்போது இந்தச் சோகம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ரஃபேலின் மனைவி வின்சி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒரு சாதரணமான பயணம் இளம் தம்பதியினரின் வாழ்க்கையையே உருக்குலைத்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் காயமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: பேருந்து விபத்து: மாவட்ட நிர்வாக செயல்பாடுகளுக்கு கேரள அமைச்சர்கள் பாராட்டு