அஸ்ஸாமில் வெள்ளத்தில் சிக்கி பல வனவிலங்குகள் உயிரிழந்துள்ளது. இந்த நிலையில், லவ்கோவா புர்ஹாச்சபோரி வனவிலங்கு சரணாலயத்தில் புதிதாக பிறந்த இரண்டு புலிக்குட்டிகளின் புகைப்படம் வெளியாகி வனவிலங்கு ஆர்வலர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்தின் பாதுகாக்கப்பட்ட இடத்தில் புலிகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் ஆதாரங்கள் முதல்முறையாக வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சரணாலயத்தின் ட்விட்டர் பக்கத்தில், "புலியின் உறுமல் சத்தம் அதிகரித்துள்ளது. லவ்கோவா புர்ஹாச்சபோரி வனவிலங்கு சரணாலயத்தில் புலிகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவது குறித்து கேமரா ஆதாரங்கள் முதல்முறையாக வெளியாகியுள்ளது. 15 ஆண்டுகாலமாக புலிகள் இனப்பெருக்க சூழலை உருவாக்கியதன் விளைவாக இது நடந்துள்ளது" என பதிவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சரணாலயத்தின் இயக்குநர் சிவகுமார் கூறுகையில், "லவ்கோவா புர்ஹாச்சபோரி பகுதி, 2007ஆம் ஆண்டு கசிரங்கா தேசிய பூங்காவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. எங்களின் முயற்சிக்கு முன்பு அதனை சிலர் ஆக்கிரமித்திருந்தனர். அப்பகுதியில் 240 மையங்கள் இயங்கி வந்தன. நாங்கள் ஆக்கிரமிப்பை நீக்கினோம். தற்போது அது பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. அங்கு பொருத்தப்பட்டிருந்த கேமராக்களில் புலிகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவது முதல் முறையாக பதிவாகியுள்ளது" என்றார்.
இந்த வனவிலங்கு சரணாலயம் 430 சதுர கிமீ அளவு பரந்துபட்டுள்ளது. இதில் 85 விழுக்காடு பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 129 வனவிலங்குகள் உயிரிழந்துள்ளன.
இதையும் படிங்க: புதரில் பிணமாக கிடைத்த கரோனா நோயாளி: மருத்துவமனையில் நடந்தது என்ன?