கர்நாடகத்தில் பி.யூ.சி 2ஆம் ஆண்டு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் 18ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 1,013 தேர்வு மையங்களில் 6 லட்சத்து 71 ஆயிரத்து 653 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.
இதையடுத்து கடந்த மாதம் (மார்ச்) 25ஆம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. 54 மையங்களில் நடைபெற்ற விடைத்தாள் திருத்தும் பணியில் 22,746 ஆசிரியர்கள் ஈடுபட்டனர். விடைத்தாள் திருத்தும் பணி கடந்த 7ஆம் தேதி முடிவடைந்தது. அதன்பிறகு பியூசி 2ஆம் ஆண்டு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 15ஆம் தேதி (அதாவது நேற்று) வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று பியூசி 2ஆம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.
பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பி.யூ கல்வித்துறை தலைமை அலுவலகத்தில் தொடக்க மற்றும் உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் உமாசங்கர், பி.யூ. கல்வித்துறை இயக்குனர் ஷிகா ஆகியோர் நேற்று காலை 11 மணிக்கு தேர்வு முடிவுகளை வெளியிட்டனர். அதன்பிறகு நண்பகல் 12 மணிக்கு தேர்வு முடிவுகள் இணையதளங்களில் வெளியாகின. இன்று(செவ்வாய்க்கிழமை) மாணவ-மாணவிகள் தேர்வு முடிவுகளை தங்கள் கல்லூரிகளில் தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து உமாசங்கர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் பியூசி 2ஆம் ஆண்டு பொதுத்தேர்வு முடிவுகள் விரைவாக வெளியிடப்பட்டு உள்ளன. இந்த தேர்வை மொத்தம் 6 லட்சத்து 71 ஆயிரத்து 653 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இதில் 4 லட்சத்து 14 ஆயிரத்து 587 மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் கர்நாடகத்தில் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி 61.73 சதவீதமாக உள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 2.17 சதவீத தேர்ச்சி அதிகமாகும்.
இதில் அறிவியல் பாடப்பிரிவில் படித்தவர்களின் தேர்ச்சி சதவீதம் 66.58 சதவீதமாகவும், வணிகவியல் பாடப்பிரிவில் படித்தவர்களின் தேர்ச்சி சதவீதம் 66.39 சதவீதமாகவும், கலை பிரிவில் படித்தவர்களின் தேர்ச்சி சதவீதம் 50.53 சதவீதமாகவும் உள்ளது.
வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 55.29 ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 68.24 ஆகவும் உள்ளது.
மங்களூருவை சேர்த்த ஆல்விடா அன்சிலா டிசோசா என்ற மாணவியும், தெட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா சர்மா என்ற மாணவனும் 600-க்கு 596 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தனர். இதேபோல் 594 மதிப்பெண்கள் பெற்று ஸ்ரீரியா செனாய் என்ற மாணவி 2-வது இடம் பெற்றார். வணிகவியல் பாடப்பிரிவில் 594 மதிப்பெண்கள் பெற்று சுவாதிக் (புத்தூர்), கவுதம் ரதி (பெங்களூரு), பீமி ரெட்டி சந்தீப் ரெட்டி (பெங்களூரு), பிரனவ் சாஸ்திரி (பெங்களூரு) என்ற மாணவர்களும், வைஷ்ணவி (பெங்களூரு), பிரக்னா (துமகூரு) என்ற மாணவிகளும் 3-வது இடம் பிடித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.