குப்பைகளையும் கழிவுப் பொருள்களையும் சரியாகக் கையாளாவிட்டால் அவை சுற்றுச்சூழலில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும். அபாயகரமான கழிவுகளை பூமியில் கொட்டுவதும், அவற்றைத் தவறான முறையில் எரிப்பதும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும். அப்படியானால், கழிவுகளை சரியாகக் கையாள்வதற்கான வழிமுறைதான் என்ன? இதற்கு ஹைதராபாத் பதில் அளிக்கிறது.
தென்னிந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில், ஹைதராபாத்தின் ஜவஹர்நகர் குப்பைக் கிடங்கில், திடக் கழிவுகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தக் குப்பை கிடங்கிலிருந்து 17.40 கோடி யூனிட் மின்சாரம் தயாரிக்க அலுவலர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். அதோடு, ஹைதராபத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதேபோன்ற திட்டங்களை செயல்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இங்கு திடக் கழிவுகளை எரித்து தயாரிக்கப்படும் மின்சாரத்தை, யூனிட் ஒன்றுக்கு 7 ரூபாய் 84 பைசாக்கள் கொடுத்து வாங்கிக் கொள்ள ஒப்பந்தம் செய்திருக்கிறது அரசு. தற்போதைக்கு இது அதிக விலையாகத் தோன்றினாலும், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் இந்த விலையைக் குறைக்கும் வகையிலும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டெல்லியின் திமார்பூரில் கடந்த 1987ஆம் ஆண்டு இதுபோன்ற ஒரு திட்டம் தொடங்கப்பட்டது. அதன்கீழ் நாளொன்றுக்கு 300 டன் திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டது. எனினும், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவே இல்லை.
அடுத்த சில பத்தாண்டுகளில், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் குறைந்தபட்சம் 180 உயிரி எரிவாயு திட்டங்கள் தொடங்கப்பட்டிருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. உயிரி எரிவாயு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.
இருந்தபோதிலும், திடக் கழிவுகளில் இருந்து மின்சாரத்தையும் உரங்களையும் தயாரிப்பதில் ஹைதராபாத் முனைப்பு காட்டி வருகிறது. குறைந்த விலையில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான இந்தத் திட்டத்திற்கு அரசு அதிக அளவில் ஊக்கமளிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இந்தியாவில், கழிவு மேலாண்மை என்பது வீடுகளில் இருந்தும் தெருக்களில் இருந்தும் குப்பைகளை சேகரித்து அவற்றை எங்காவது ஒரு இடத்தில் மொத்தமாக கொட்டுவது என்பதாகத்தான் உள்ளது.
ஆரம்ப காலங்களிலேயே, குப்பைகளில் இருந்து மின்சாரத்தை தயாரிக்கும் திட்டத்தை தொடங்கிய வெகுசில மாநகராட்சிகளில் மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரும், அஸ்ஸாமின் கௌஹாத்தியும் அடங்கும். நாட்டின் மிகப்பெரிய திடக் கழிவு மின்உற்பத்தி நிலையத்தைக் கொண்டுள்ள மாநகராட்சி டெல்லி. இங்கு நாளொன்றுக்கு இரண்டாயிரம் டன் திடக்கழிவுகளில் இருந்து 24 மெகா வாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் மின்உற்பத்தி நிலையத்தை விரிவுபடுத்த, டெல்லி அரசு திட்டமிட்டு வருகிறது.
நாடு முழுவதும் நான்காயிரம் திடக்கழிவு மின்உற்பத்தி நிலையங்களை அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ள போதிலும், இவ்விஷயத்தில் மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கைகளை இதுவரை எடுக்கவில்லை.
கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் ஸ்பெயின் அரசு 1940களிலேயே கவனம் செலுத்தத் தொடங்கியது. திடக்கழிவுகளை மறு சுழற்சி செய்வதில் ஜெர்மனியும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஆஸ்திரியா, தென் கொரியா, சுவிஸ்ட்சர்லாந்து ஆகிய நாடுகளும், கழிவுகளில் இருந்து எரிபொருள்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன.
வரும் 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 16.50 கோடி டன் குப்பைகள் உருவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது நம் முன் காத்திருக்கும் மிகப் பெரிய சவால். இந்த சவாலை எதிர்கொள்வதற்கு ஏற்ப நாம் திட்டங்களை அமல்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.
கேன்சர், ஆஸ்துமா உள்ளிட்ட 22 வகையான சுவாசக் கோளாறுகளால் இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. நமது நாட்டில் கழிவு மேலாண்மை எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இது நமக்கு உணர்த்துகிறது. குப்பைகளை சேகரிப்பதற்கும் அகற்றுவதற்கும் ஒரு வலிமையான வழிமுறையை நாம் விரைவாக உருவாக்க வேண்டியது மிகவும் அவசியம். அதை உருவாக்கிவிட்டால் கழிவுகளால் ஏற்படும் அபாயங்களில் இருந்து நாம் தப்பிவிடலாம்.