புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடந்த வாரம் சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள கரோனா கட்டுப்பாட்டு மையத்துக்கு சென்றார். அப்போது அங்கிருந்த அலுவலர்களிடம் கரோனா குறித்து தனக்கு ஒரு வாரகாலமாக தகவல்கள் தராதது ஏன்? கட்டுப்பாட்டு மையத்தின் பொறுப்பாளராக இருக்கும் அலுவலர் யார்? என்று கேட்டார்.
இதையடுத்து கட்டுப்பாட்டு மைய பொறுப்பாளரான துணை இயக்குநர் ரகுநாதனிடம் கிரண் பேடி சரமாரியாக பல கேள்விகளை கேட்டார். அதற்கு அவர் அளித்த பதில்களுக்கு திருப்தி அடையாத கிரண்பேடி, செய்யும் தொழிலுக்கு நேர்மையாக இருங்கள், மக்களுக்கு உண்மையாக பணியாற்றுங்கள் என ஆவேசமாக கூறினார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சுகாதார ஊழியர்கள் இருநாள்களாக போராட்டம் நடத்தினர். இச்சம்பவத்தால் மன உளைச்சலில் இருந்த ரகுநாதன் நேற்று (ஜூலை 22) புதுச்சேரி அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அங்கு தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.