தெலங்கானா மாநிலம், கரீம் நகர் மாவட்டத்திலுள்ள எடப்பள்ளி அருகே கக்கட்டியா என்ற கால்வாய் உள்ளது. இக்கால்வாயில் வாகன விபத்துகள் நடப்பது தொடர் கதையாகி வருகிறது. திங்கள்கிழமை (பிப்ரவரி 17) இரு சக்கர வாகனம் ஒன்று இந்த கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்தக் கால்வாயில் கார் ஒன்று மூழ்கிக் கிடப்பதாக, அப்பகுதி பொது மக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், பொது மக்கள் உதவியுடன் காரை வெளியே எடுத்தனர்.
அந்தக் கார் 15 நாள்களுக்கு முன்னர் கால்வாயில் விழுந்திருக்காலம் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தக் காரில் மூன்று பேரிடன் சடலங்களை கைப்பற்றிய காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் தெலங்கானா சட்டப்பேரவை உறுப்பினர் மோகன் ரெட்டியின் இளைய சகோதரி ராதா, அவரது கணவர் சத்யநாராயண ரெட்டி, அவர்களது குழந்தை என்பது தெரியவந்தது. முன்னதாக, இவர்கள் மூவரையும் காணவில்லை என்று காவல் துறையினரிடம் உறவினர்கள் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : திருமணத்தை மீறிய உறவால் மூதாட்டிக்கு அறிவாள் வெட்டு - 4 பேர் கைது