ஜம்மு-காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது பள்ளியின் பாதுகாப்புக்காக அங்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
அங்கு திடீரென வந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கிச் சரமாரியாகச் சுட்டனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஐந்து மாணவர்கள் மாட்டிக்கொண்ட நிலையில், அவர்களை ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தி மீட்டனர். அப்போது, 3-4 பயங்கரவாதிகள் ஒரே வீட்டில் மாட்டிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் ராணுவத்தினருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.
காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதி நீக்கியதிலிருந்தே பயங்கரவாதத் தாக்குதல் மாநிலத்தில் அதிகரித்துள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் கூறிவந்த நிலையில், இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. முன்னதாக, பயங்கரவாதிகள் ஷோபியான் பகுதியில் தாக்குதல் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காஷ்மீரில் தொடரும் அடக்குமுறை?