கரோனா வைரசின் தீவிரத்தால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கையாண்டுவருகின்றன.
கரோனா அறிகுறியுடன் உள்ளவர்களைப் பரிசோதனைக்குள்படுத்தி உடனடியாகத் தனிமைப்படுத்துவது, வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கண்காணிப்பது என அந்தந்த மாநில அரசுகள் துரித நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
இதனால் வைரசின் பரவல் பெருமளவு குறைந்துள்ளது. அந்த வகையில் தெலங்கானா மாநிலத்தில் பல்வேறு கட்ட பாதுகாப்புப் பணிகளை முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மேற்கொண்டுவருகிறார். கரோனாவால் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டாலும் தங்களால் அதனைத் திறம்பட சமாளிக்க முடியும் என்றும் அவர் கூறுகிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களிடம் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (Personal Protection Equipment) கைவசம் உள்ளன. இந்த எண்ணிக்கையை ஐந்து லட்சமாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் 5 லட்சம் உபகரணங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல 3 லட்சத்திற்கும் மேற்பட்ட என்-95 வகை முகக்கவசங்கள் உள்ளன. இன்னும் ஐந்து லட்சம் முகக்கவசங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர வென்ட்டிலேட்டர், மற்ற மருத்துவ உபகரணங்கள், நோயாளிகளைத் தனிமைப்படுத்தும் இடங்கள், படுக்கை வசதிகள் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்குச் சிகிச்சையளிக்க போதுமான அளவுக்கு மருத்துவர்கள், செவிலியரும் உள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாள்களாக அதிகரித்துக் கொண்டே சென்ற பாதிப்பு எண்ணிக்கை நேற்று குறைந்துள்ளது. நேற்று புதிதாக ஆறு பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதன் மூலம், மொத்த எண்ணிக்கை 650ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: வரும் 20ஆம் தேதி 90% தொழிற்சாலைகள் இயங்கும் - புதுச்சேரி முதலமைச்சர்