தெலங்கானாவில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலை கருத்தில்கொண்டு, அனைத்து பொது நுழைவுத் தேர்வையும் ஒத்திவைக்குமாறு மாநில அரசிற்கு அறிவுறுத்தக் கோரி, காங்கிரஸுடன் இணைந்த இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் (என்.எஸ்.யு.ஐ) மாநிலத் தலைவர் வெங்கட் பால்மூர் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஹைதராபாத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் பட்சத்தில், பொது தேர்வுகளை எவ்வாறு நடத்த முடியும் என்று கேள்வி எழுப்பியது.
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், அனைத்து பொது நுழைவுத் தேர்வுகளையும் மாநில அரசு ஒத்திவைப்பதாகவும், இதற்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தெலங்கானா மாநில பொறியியல், வேளாண்மை மற்றும் மருத்துவ பொது நுழைவுத் தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் இன்று முதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.