தெலங்கானா ஆணவ கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பெண்ணின் தந்தையான மாருதி ராவ் ஹைதராபாத்தில் உள்ள தங்கும் விடுதியில் பூச்சிக் கொல்லி மருந்தை அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "மார்ச் 7ஆம் தேதி விடுதிக்கு ராவ் வந்துள்ளார். அடுத்த நாள் நீண்ட நேரமாகியும் அவர் அறையிலிருந்து வெளிவரவில்லை. இதையடுத்து, அறையின் கதவுகளை உடைத்து விடுதிக்கு உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையில் அவர் பிணமாக கிடந்தார்" என்கிறது.
2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பிரணாய் குமார் என்பவர் முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அம்ருதாவை காதல் திருமணம் செய்து கொண்ட காரணத்தால் படுகொலை செய்யப்பட்டார்.
மாருதி ராவும் மற்ற உறவினர்களும்தான் கொலைக்கு காரணம் என அம்ருதா காவல்நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ரூபாய் 1 கோடி வழங்கி கொலை செய்தது தெரியவந்தது. பெண்ணின் திருமணத்தை ஏற்றுக் கொள்ளாத ராவ், 15 லட்சம் ரூபாய் முன்பணத்தை அளித்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் என காவல்துறை தரப்பு தெரிவித்தது.
2018ஆம் ஆண்டு, செப்டம்பர் 14ஆம் தேதி மருத்துவமனைக்கு மனைவியை அழைத்துச் சென்றபோது அடையாளம் தெரியாத நபர்களால் பிரணாய் கடுமையாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'அன்புதான் அனைத்துக்குமான பதில்... அன்பே வழி...' - சாதனைப் பெண் சஞ்சனா கோயல்