தெலங்கானாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி கொலை செய்த குற்றவாளிகள் நான்கு பேர் காவலர்களால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.
விசாரணையின் போது காவலர்களை தாக்கி தப்பியோட முயற்சித்த அவர்களை காவலர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 8 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவிற்கு தெலங்கானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சிறப்பு விசாரணைக் குழுவிற்கு ரச்சகோண்டா காவல் ஆணையர் மகேஷ் எம். பகத் தலைமை வகிப்பார். இவர் ஷம்சாபாத் சாலையில் நடந்த என்கவுண்டர் குறித்து விசாரணை நடத்துவார். இந்த ஆணையம் என்கவுண்டர் நடந்த போது நிகழ்ந்த உண்மை நிலையை கண்டறியும்.
இது தொடர்பாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அரசாணையில், இந்த சிறப்பு விசாரணைக் குழுவுக்கு அனைத்து உதவிகளும் வழங்க வேண்டும். இவர்களின் விசாரணை விரைந்து நடக்க சம்மந்தப்பட்டவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு விசாரணைக் குழு தனது விசாரணை அறிக்கையை சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும். ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பாக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் கவலையை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு ஈடிணையில்லை - என்கவுன்டர் குறித்து நயன்தாரா கருத்து