தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 3ஆம் தேதில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில், துபாக் சட்டப்பேரவை தொகுதியில் பாஜக சார்பில் ரகுநந்தன் என்பவர் போட்டியிடுகிறார். ரகுநந்தனின் உறவினர் வீட்டிலிருந்து, வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா செய்வதாக தகவல் வெளியானது.
இது குறித்து அறிந்த காவல் துறையினர், மாவட்ட காவல் ஆணையர் ஜோயேல் டேவிஸ் தலைமையில் சித்திப்பேட்டில் உள்ள ரகுநந்தனின் உறவினர் வீட்டில் சோதனை நடத்தினர். அதில் அந்த வீட்டிலிருந்து கணக்கில் வராத 18 லட்சத்து 67ஆயிரம் ரூபாயை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த பணம் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
கைப்பற்றப்பட்ட பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்த போது, பாஜக தொண்டர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே கைகலப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட பாஜக தொண்டர் ஒருவர், பறிமுதல் செய்யப்பட்ட பணத்திலிருந்து ஒரு கட்டை தூக்கிச் சென்றுள்ளார். அதன் மதிப்புன் ஐந்து லட்சத்து 87 ஆயிரம் ஆகும்.
இந்த சம்பவம் அனைத்து காவல் துறையினர் சார்பில் எடுக்கப்பட்ட வீடியோவில் பதிவாகியுள்ளது. இது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். காவல் துறையினரின் இந்த அதிரடி சோதனைக்கு தெலங்கானா மாநில தலைவர் பந்தி சஞ்சய் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், காவல் ஆணையர் ஜோயேல் டேவிஸை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
இதையும் படிங்க...கோயம்பேடு இறைச்சி கடை ஆடுகள் திருட்டு, போலீஸ் விசாரணை