கரோனா வைரஸ் நோய் இந்தியாவில் வேகமாக பரவிவருகிறது. நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, வெளி மாநில தொழிலாளர்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவித்துவருகின்றனர். இந்நிலையில், அவர்களை சொந்த மாநிலத்துக்கு அழைத்துச் செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும் என காங்கிரஸ் அறிவித்தது.
இதனிடையே, தெலங்கானாவில் சிக்கித் தவிக்கும் உத்தரப் பிரதேசம், ஒடிசாவைச் சேர்ந்த 80 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலத்துக்கு அழைத்துச் செல்ல காங்கிரஸ் கட்சி சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்தது.
தெலங்கானா காந்தி பவனில் உள்ள கட்சி தலைமையகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிறப்பு பேருந்துகளை காங்கிரஸ் மாநில தலைவர் உத்தம் குமார் ரெட்டி, மூத்தத் தலைவர் சசிதர் ரெட்டி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். தேவையான உணவு, பழங்கள், தண்ணீர் ஆகியவை அவர்களுக்கு வழங்கப்பட்டதாக சசிதர் ரெட்டி தெரிவித்தார்.
இதுபோல் பல மாநிலங்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். வெளி மாநில தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களுக்கான கட்டணத்தை காங்கிரஸ் ஏற்கும் என அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, ரயில் கட்டணத்தில் 85 விழுக்காட்டை மத்திய அரசு ஏற்கும் என பிரதமர் மோடி அறிவித்தார்.
இதையும் படிங்க: வெளிமாநில தொழிலாளர்கள் விவகாரம்: சிவராஜ் சிங் சவுகான் vs கமல்நாத்