ஜூலை 28ஆம் தேதியன்று இரவு 11.20 மணியளவில் தோமல்குடா பகுதியில் பைனான்ஸ் கம்பெனி நடத்திவரும் தொழிலதிபர் கஜேந்தர் பரேக் கடத்தப்பட்டார். அதையடுத்து அவரது குடும்பத்தினரை மிரட்டி ரூ.1 கோடி பணம் வாங்கிய கடத்தல் கும்பல், அவரை மறுநாள் விடுவித்தது.
பின்னர் இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், முகமது அப்பாஸ் (21), முகமது அக்பர் (22), ஷஃபீக் அலி (19) ஆகியோர் தொழிலதிபரை கடத்தியதில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் மூவரையும் கைது செய்தனர்.
இந்தக் கடத்தலில் ஈடுபட்ட மற்ற இரண்டு பேர் தலைமறைவானதாகவும் கூறப்படுகிறது. கைதான மூவரும் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், கடத்தலில் ஈடுபட்டவர்களை கைதுசெய்தபோது அவர்களிடமிருந்து ரூ. 35 லட்சம் ரொக்கம், இரண்டு கார்கள், இரண்டு இருசக்கர வாகனங்கள், இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.