Latest National News: பிகார் மாநிலத்தில் தற்போது வரலாறு காணாத வகையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பிகார் தலைநகர் பாட்னா வெள்ளத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிகார் மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், முதலமைச்சர் நிதிஷ்குமாரைக் கடுமையாக விமர்சித்தார்.
அப்போது அவர், "பாட்னா முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இங்குள்ள மழைநீர் வடிகால் அமைப்பு முற்றிலுமாக செயலிழந்துவிட்டது. வடிகால் அமைக்கும் பணியில் பெரும் ஊழல் நடந்துள்ளதை இது உணர்த்துகிறது" என்றார்.
நடவடிக்கை எடுக்க வேண்டிய உயர் அலுவலர்கள் யாரையும் இப்போது காணவில்லை; அவர்கள் சன்னியாசத்திற்குப் போய்விட்டார்கள் போல என்றும் அவர் விமர்சித்தார். மேலும், தற்போது பாஜகவுக்கும் ஐக்கிய ஜனதா தளத்திற்குமிடையே நடந்துவரும் வார்த்தைப்போர் பற்றி அவர் கூறுகையில், மிருகங்களுக்கிடையே நடக்கும் சண்டைபோல் உள்ளது என்று கூறினார்.
பிகாரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் குறைந்தது 17 பேர் வரை இறந்துபோயிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: பிரான்ஸில் சாஸ்திரா பூஜை செய்ய இருக்கும் மத்திய அமைச்சர்!