பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த அக்டோபர் 28ஆம் தேதி, முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் மூன்றாம் தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையே, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர்.
பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த மத்திய அமைச்சர் அஸ்வினி செளபே, கேபினட் என்ற வார்த்தையைக்கூட தேஜஸ்விக்கு உச்சரிக்கத் தெரியாது என விமர்சனம் செய்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "பத்தாம் வகுப்புகூட தேர்ச்சி பெறாத தேஜஸ்வி யாதவ் தேர்ச்சி பெற்ற பொறியாளரான நிதிஷ்குமாரை விமர்சிக்கிறார். உண்மையான விவகாரங்கள் குறித்து தேஜஸ்வி யாதவுக்கு புரிந்துகொள்ளக்கூட தெரியாது.
லாலு பிரசாத் யாதவ் முதலமைச்சராக பதவியேற்றதைத் தொடர்ந்து ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் விண்ணப்பித்தவர்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு அதனை நிறைவேற்றாமல் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார். காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் பொய் வாக்குறுதிகளை மட்டுமே அளிக்கும். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கரோனா தடுப்பூசி குறித்த பாஜகவின் வாக்குறுதி தேர்தல் விதிமீறல் அல்ல எனத் தேர்தல் ஆணையமே தெரிவித்துவிட்டது. தடுப்பூசி குறித்த ஆய்வு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அது அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும்" என்றார்.