ஐபிஎல் கிரிக்கெட் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது. முதல்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும், தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வரும் சிஎஸ்கே அணி; கொல்கத்தா அணிக்கு எதிரானப் போட்டியில் படுதோல்வி அடைந்தது. அதுமட்டுமின்றி இந்தப் போட்டியில் தோனி மோசமான ஆட்டத்தை ஆடினார். இதனால், அவருக்கு எதிராகப் பலர் சமூக வலைதளத்தில் கருத்துப் பதிவிட்டனர்.
அந்தவகையில், தோனி, சாக்ஷி தோனியின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் 'ஒழுங்காக விளையாடவில்லையென்றால், தோனியின் ஐந்து வயது மகளான ஷிவா தோனியை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவேன்' என ஒரு சிறுவன் பதிவிட்டுள்ளான். இதற்கு காங்கிரஸ் பிரமுகர் நக்மா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இது போன்று பதிவிட்டது குஜராத் குஜராத் மாநிலம், முந்தராவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் எனத் தெரியவந்தது. இதனையடுத்து சிறுவனை குஜராத் காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
இது குறித்து மேற்கு கட்ச் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சவுரப் சிங் கூறுகையில், 'சமூக வலைதளத்தில் பதிவிட்ட சிறுவன் குஜராத்தைச் சேர்ந்தவன் என ராஞ்சி காவல் துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, அவர் 12ஆம் வகுப்பு மாணவன் எனக் கண்டறிந்தோம். கேகேஆருக்கும், சிஎஸ்கேக்கும் இடையே நடந்த போட்டியில் தோனி சிறப்பான ஆட்டத்தை ஆடாததால் தான், தான் அவ்வாறு பதிவிட்டதாக 16 வயது சிறுவன் ஒப்புக் கொண்டுள்ளான். இதனையடுத்து அவனைப் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஆஜர்படுத்தவுள்ளோம்' என்றார்.
இதையும் படிங்க...திடீர் டெல்லி பயணம்: குஷ்பூ பாஜகவில் இணைகிறாரா?