இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7.3 விழுக்காடு அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்தப்படியாக ராஜஸ்தான் மாநிலத்தில் தான் பெண்கள், சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகளவில் நடைபெற்று வருவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
குழந்தைத் திருமணம், வரதட்சணை கொடுமை, பாலியல் துன்புறுத்தல், ஆணவப் படுகொலைகள் என பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளும், குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதனை உலகத்தின் பார்வைக்கு கொண்டுவரும் வகையில், 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை வெளியே தெரியவந்துள்ளது.
தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிகளில் 5 தங்கப் பதக்கங்களை வென்ற அந்த சிறுமியை, அவரது உறவினர் ஒருவருக்கு கட்டாயக் குழந்தை திருமணம் செய்து வைக்க முயன்றனர். இதற்கு அவரும், அவரது தாயும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன், இதுகுறித்து 1098 என்ற தொலைபேசி எண் மூலம் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பிற்கு ரகசிய தகவலும் அளித்துள்ளனர். இதனால், கோபமடைந்த சிறுமியின் தந்தை, அவர்கள் இருவரையும் கொலைவெறியோடு கடுமையாக தாக்கியுள்ளார்.
இதனையடுத்து, சம்பவம் இடத்திற்கு விரைந்துவந்த ராஜஸ்தான் மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அலுவலர்கள், இருவரையும் மீட்டு ஆர்.பி.எம் மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது, இருவருக்கும் அங்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
![தங்கப்பதக்கங்களை வென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடுமை - மீட்டது குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10096817_199_10096817_1609599974426.png)
இது குறித்து கருத்து தெரிவித்த ராஜஸ்தான் மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையர் சங்கீதா பெனிவால் கூறுகையில், “பளு தூக்கும் வீராங்கனையான 14 வயது சிறுமிக்கு கட்டாய குழந்தை திருமணம் செய்து வைத்த அவரது தந்தை மற்றும் உறவினர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவரது தந்தை, மாமா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தான் கலந்து கொண்ட அனைத்து போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை வென்றுள்ள அந்த சிறுமி எதிர்காலத்திலும் தொடர்ந்து விளையாடி, சாதனைகள் படைக்க வேண்டும் என விரும்புகிறார்” என்றார்.
இதையும் படிங்க : 'கோவிட்-19 தடுப்பூசி குறித்து அவதூறு பேசிய அகிலேஷ் யாதவ் மன்னிப்பு கேட்க வேண்டும்' - கேசவ் பிரசாத் மெளரியா