ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், விஜயநகரத்தில் விழிப்புணர்வு பரப்புரை செய்வதற்காக ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வந்தார். இதையறிந்து, அங்கு திரண்ட ஒய்.ஆர்.எஸ். காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள், சந்திரபாபு நாயுடுவின் பரப்புரைக்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர். இதனிடையே, அவருடைய வாகனத்தின் மீது தக்காளி, முட்டை, செருப்பு ஆகியவற்றை எறிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதனால், 5 மணி நேரமாக அவர் விமான நிலையத்திலேயே காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, தகவலறிந்து வந்த தெலுங்கு தேச கட்சியினரும் விமான நிலையம் முன்பு திரண்டனர்.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையத்தின் முன்பு போராட்டம் நடத்த காவல் துறையினர் தடை விதித்தனர். ஆனால், தடையை மீறி முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு போராட்டம் நடத்தியதாக தெரிகிறது. இதனால் காவல் துறையினர் அவருக்கு பிரிவு 151ன் கீழ் நோட்டீஸ் கொடுத்து, கைது செய்துள்ளனர். இதனால், அங்கிருந்த தெலுங்கு தேச கட்சியினரிடையே பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த இடத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமலிருக்க காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கைதிற்கு பின் விமான நிலையத்தின் விஐபி அறைக்குள் சந்திரபாபு நாயுடு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதையும் படிங்க: தேர்தலில் தலையிட வெச்சிடாதீங்க - அமெரிக்காவை எச்சரிக்கும் பாஜக பிரமுகர்