சென்னை: சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது மரணத்துக்கு அவளது கணவர் ஹேம்நாத் தான் காரணம் என்று சித்ராவின் தாயார் கூறியுள்ளார்.
சித்ராவின் உடல்கூராய்வு இன்று காலை நடந்த நிலையில், சித்ரா உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக அவரது தாயார் கண்ணீர் மல்க ஊடகங்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “எனது மகள் மிகவும் தைரியமான பெண். காரை சொந்தமாகவே ஓட்டிவருவார். எந்தப் பிரச்னையையும் தைரியமான அணுகும் பக்குவம் கொண்டவர்.
அவர் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பே இல்லை. அவளுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி ஊரறிய திருமணம் நடத்த திட்டமிட்டிருந்தோம். இந்நிலையில் அவளை அவளது கணவன் ஹேம்நாத் அடித்தே கொன்றுவிட்டான்.

என் மகளின் சாவுக்கு நீதி வேண்டும், இது தொடர்பாக நான் காவல்நிலையத்தில் புகார் அளிப்பேன்” என்றார்.
இந்நிலையில் சித்ராவின் உடல் உடற்கூராய்வுக்கு பின்னர் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சித்ராவின் மரணம் தொடர்பாக வெவ்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.
சித்ரா தனது கணவருடன் ஹோட்டலில் ஒரே அறையில் தங்கியிருந்துள்ளார். மேலும் அவரில் கன்னம் மற்றும் உடலில் காயங்கள் உள்ளன என்றும் கூறப்படுகிறது.
மேலும் அவரது கணவர் ஹேம்நாத் -திடம் காவலர்கள் விசாரணை நடத்திய நிலையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் காவலர்கள் அவரிடம் விசாரணையை துரிதப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
சின்னத்திரை நடிகர் சித்ராவின் மரணம் அவரது ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், அவரின் உடற்கூராய்வு நடந்த மருத்துவமனையில் அவரின் ரசிகர்கள் பெருமளவு கூடியிருந்தனர்.
இதையும் படிங்க : சின்னத்திரை நடிகை சித்ராவின் உடற்கூராய்வு நிறைவு