கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. உலகளவில் வர்த்தக நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் பெருமளவில் பாதித்துள்ளன. இதற்கு பள்ளிகளும் விதிவிலக்கா என்ன?
புதுச்சேரி கடலூர் சாலையில் இயங்கி வருகிறது மதர் தெரசா தனியார் பள்ளி. இப்பள்ளியில் நைனார்மண்டபம் பகுதியைச் சேர்ந்த நிக்கோலாஸ் தமிழ் ஆசிரியராக பணியாற்றிவருகிறார். இவர் பணியாற்றி வரும் தனியார் பள்ளியும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், தமிழ் ஆசிரியர் நிக்கோலாஸ் நான்கு மாதங்களாக பாதி ஊதியம் பெற்று குடும்பத்தை நடத்த சிரமப்பட்டு வருகிறார். இதனால் மாற்று தொழிலுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார் தமிழாசிரியர்.
எதைக்குறித்தும் கவலைப்படாமல் குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவருக்கு கைகொடுத்தது அவரது இருசக்கர வாகனமும், பூ வியாபாரத் தொழிலும். தெருவில் வேறு இடங்களில் கடைபோட்டால் அங்குள்ள கடைக்காரால் பிரச்னை ஏற்படும். அதனால் தான் பணிபுரியும் பள்ளிக்கூட வாசலை தேர்வு செய்து தனது வாகனத்தில் பூக் கூடைகளை வைத்து கூவுக் கூவி விற்கத் தொடங்கினார் ஆசிரியர் நிக்கோலஸ்.
அந்நிலை குறித்து விளக்கிய நிக்கோலஸ், “13 ஆண்டுகளாக மதர் தெரசா பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்து வருகிறேன். ஊரடங்கினால் எனக்கும் பாதிப்பு ஏற்பட்டது. பள்ளியில் தரப்படும் பாதி ஊதியத்தை வைத்து குடும்பத்தை நடத்த சிரமமாக இருந்தது.
பள்ளி எதிரில் தற்போது பூ விற்பதால் மாணவர்களின் பெற்றோர்களும் பூ வாங்கிச் செல்கின்றனர். ஆனால் அதை நான் அசிங்கமாக நிலைக்கவில்லை. காலையில் புதுச்சேரி பெரிய சந்தையில் பூ வாங்கி வந்து வீட்டில் பொட்டலமாக போட்டு, பூ பொட்டலம் ஒன்று 30 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். நாள் ஒன்றுக்கு ரூபாய் குறைந்தது 200 ரூபாய் வருமானம் கிடைக்கும்” என்றார்.