குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் சுமார் 100 தமிழ்க் குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள தமிழ் குழந்தைகள் படிப்பதற்கு ஏதுவாக அப்பகுதியில் 'ஸ்ரீகிருஷ்ணா தமிழ் வித்யாலயம்' என்ற பள்ளி சுமார் 81 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. குஜராத் மாநிலத்தில், தமிழ் வழியில் பாடத்தை கற்பிக்கும் ஒரே மேல்நிலைப்பள்ளி இதுமட்டுமே.
சில ஆண்டுகளுக்கு முன், இப்பள்ளியில் சுமார் 100 மாணவர்கள் படித்து வந்தனர். ஆங்கிலத்தின் மேல் உள்ள மோகத்தால், பல பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிப் பள்ளிகளில் சேர்த்ததால், தற்போது இப்பள்ளியில் வெறும் 31 மாணவர்கள் மட்டுமே தமிழ் வழியில் கல்வி கற்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளி தொடர்ந்து செயல்படுவதற்கு 36 மாணவர்களுக்கும் மேல் இருக்கவேண்டும் எனக் கூறி அகமதாபாத் மாவட்ட கல்வி அலுவலர் பள்ளியை மூட உத்தரவிட்டார்.
இதனால், அந்த 31 தமிழ் மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்தச்சூழ்நிலையில், தமிழ்ப் பள்ளியை மூடுவதற்கான உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி, குஜராத் கல்வி அமைச்சர் பூபேந்திர சிங் சூடாஸிடம் மனு அளிப்பதற்காக தமிழ்ப்பள்ளி மாணவர்கள், மாநிலத் தலைநகரான காந்தி நகருக்கு வந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்ப்பள்ளி மாணவி ப்ரீத்தி, "பள்ளியைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு தமிழ் மொழியைத் தவிர, மற்ற மொழி அவ்வளவாக தெரியாது. நடப்பாண்டு மட்டுமாவது, இங்கு படிக்க அனுமதிக்க வேண்டும். ஆங்கில வழிக்கல்வியில் படிக்கும் அளவுக்கு எங்களுக்கு வசதியும் இல்லை.
எனவே, அனைத்து மாணவர்களின் ஆர்வத்தையும் கருத்தில்கொண்டு பள்ளியை மூடும் உத்தரவை திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்துவதற்கு வந்துள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: குஜராத்தில் இருந்த ஒரே தமிழ் வழி பள்ளி மூடல்; கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்