இளங்கலை, முதுகலை மருத்துவப் படிப்புகளில் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு 27 விழுக்காடு தேசிய அளவிலான இட ஒதுக்கீட்டை அரசு கல்லூரிகளில் அமல்படுத்த அரசுக்கு உத்தரவிடக்கோரி மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், "மத்திய அரசு பணிகளில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு இந்திய அரசு வழங்கியது. பின்னர், உச்ச நீதிமன்றம் அதனை உறுதிசெய்தது.
ஆனால், 2017-18, 2018-19, 2019-20 ஆகிய கல்வியாண்டுகளில் இந்த இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. 2018-19 கல்வியாண்டில், மொத்தமுள்ள 7,982 இடங்களில் 2,152 பேருக்கு இட ஒதுக்கீடு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 220 பேர் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர்.
அதேபோல், இளங்கலை மருத்துவப் படிப்பில் தேசிய அளவிலான இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 66 பேர் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். இளங்களை மருத்துவப் படிப்பை பொறுத்தவரை தேசிய அளவில் 4,061 இடங்கள் உள்ளன.
27 விழுக்காடு என்றால் 1,096 பேருக்கு இடங்கள் ஒதுக்கியிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறதா என்பதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக தேசிய அளவிலான இட ஒதுக்கீட்டைச் சரியாக அமல்படுத்த வேண்டும் எனப் பிற்படுத்தப்பட்ட மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இது குறித்து அன்புமணி முன்னதாகவே மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால், இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக அரசு பதிலளித்துள்ளது.
முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக திமுக செய்தித் தொடர்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குத் தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு!