இந்தியா - சீனா எல்லை பகுதிகளான அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், லடாக் ஆகியவை எல்லைக்கோட்டுப் பகுதியாக (லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல்) அழைக்கப்படுகிறது. இந்த எல்லைப் பகுதிகளில் இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நடப்பது வழக்கம்.
இந்நிலையில், லடாக், யூனியன் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் மே மாதம் தொடக்கத்தில், சீன படையினரின் தூண்டுதலின் பேரில் இரண்டு முறை மோதல் நடைபெற்றது. இதையடுத்து, இருநாடுகளும் தங்களது பாதுகாப்புப் படையினரை லடாக்கில் குவித்துள்ளன. இதனால் அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "எக்காரணம் கொண்டும் இந்தியாவின் பெருமைக்கு களங்கம் விளைவிப்பதை அரசு அனுமதிக்காது. அண்டை நாடுகளுடனான நல்லுறவை பேணும் கொள்கையை இந்தியா தெளிவாக கடைபிடித்து வருகிறது. லடாக் எல்லை பிரச்னையை தீர்க்க இந்தியா - சீனா இடையே ராணுவ அளவிலும், அரசாங்க அளவிலும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது" என்றார்.
இதையடுத்து, இந்தியா - சீனா இடையே மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா முன்வந்தது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பருடன் நான் தொலைபேசி மூலம் ஆலோசனை மேற்கொண்டேன். இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் சீனாவுடனான பிரச்னையைத் தீர்க்க முயன்று வருவதாக கூறினேன்" என்றார்.
இதையும் படிங்க : ட்ரம்ப்பின் மத்தியஸ்த முயற்சி: சூசகமாக நிராகரித்த இந்தியா!