இந்தியாவில் கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வரும் ஏப்ரல் 15ஆம் தேதிவரை நாடு முழுவதும் 21 நாள் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் மருத்துவர்கள் சுகாதாரப் பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றனர்.
மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினர் ஆகியோருக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ள நிலையில், நாட்டின் சில பகுதிகளில் மருத்துவர்கள் சில இன்னல்களைச் சந்தித்துவருவதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கம் மத்திய அரசுக்கு புகார் அளித்துள்ளது.
டெல்லி, தெலங்கானா போன்ற மாநிலங்களில் வாடகை வீட்டில் தங்கியுள்ள மருத்துவர்கள் உடனடியாக வீட்டைக் காலிசெய்ய வேண்டும் என வீட்டின் உரிமையாளர்கள் சில நாள்களாக வற்புறுத்தியுள்ளனர். கரோனா வைரஸ் பீதியால் நோயாளிகளைப் பரிசோதனை செய்யும் மருத்துவர்கள் மீது அச்சம் கொண்டு உரிமையாளர்கள் இவ்வாறு நடந்து கொள்வதாகப் புகார்கள் வருகின்றன.
இவ்விவகாரம் மத்திய உள் துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இவ்விவகாரத்தில் டெல்லி அரசும் துணைநிலை ஆளுநரும் விரைந்து தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள் துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டார்.
இது குறித்து டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜல் செய்தியாளர்கள் சந்திப்பில், "மருத்துவர்களைத் துன்புறுத்தும்விதமாக வீட்டு உரிமையாளர்கள் நடந்துகொள்வதாகச் செய்திகள்வருகின்றன. இது கவலைக்குரிய விஷயம்.
மருத்துவர்களை இவ்வாறு வற்புறுத்தும் உரிமையாளர்களின் விவரத்தை சேகரிக்குமாறு டெல்லி காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இது போன்ற நடவடிக்கைகளை உரிமையாளர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனாவின் புதிய மையப் புள்ளி அமெரிக்கா - உலக சுகாதார அமைப்பு