தப்லீக் ஜமாத் அமைப்பு சார்பாக டெல்லியில் சமய மாநாடு நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட பெரும்பான்மையானோர் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. பலர் மீது வழக்குப்பதிவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தல் மையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், டெல்லி காவல் துறையினர் தப்லீக் ஜமாத் வழக்கு தொடர்பாக 83 வெளிநாட்டினர் மீது 20 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்மாத தொடக்கத்தில் தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் 700 பேரின் ஆவணங்களைக் காவல் துறையினர் கைப்பற்றினர். இதில் பாஸ்போர்ட் உள்ளிட்டவையும் அடங்கும். இந்த தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் அனைவரும் நிஜாமுதீனில் நடைபெற்ற சமய மாநாட்டில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
மே 5ஆம் தேதியன்று, டெல்லி குற்றப்பிரிவு காவல் துறையினர், தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத்தின் மகனை விசாரித்ததில் சமய மாநாட்டில் கலந்துகொண்ட 20 பேர் குறித்த விவரங்களைச் சேகரித்தனர். இதற்கு முன்னதாக, தப்லீக் ஜமாத் அமைப்பின் தலைவர் உள்ளிட்ட மாநாட்டில் கலந்துகொண்ட பலர் மீதும் தொற்று நோய்ச்சட்டம், 1897இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோவிட்-19 தொடர்பாக உலகளாவிய மரபணு ஆய்வில் இறங்கியுள்ளது வாஷிங்டன் பல்கலைக்கழகம்!