முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடல்நலக் குறைவால் நேற்று இரவு காலமானார். அவரது இறப்பிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை அவருக்கு இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டார். இதனால் 370, 35ஏ பிரிவு ரத்து செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தில் பல்வேறு அமளிகளுக்கு இடையே இந்த அறிவிப்பை அமித் ஷா வெளியிட்டார். ஆளும் கட்சிகள் இந்த அறிவிப்பை வரவேற்ற நிலையில், எதிர்கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
அதையடுத்து முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவரது ட்விட்டர் பக்தத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளதாவது, "பிரதமர் மோடிக்கு நன்றி என் வாழ்நாளில் நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நாள் இது தான்" என்று கூறியுள்ளார். அவர் உயிரிழப்பதற்கு சிறிது நேரம் முன்பு தான் இதை பதிவிட்டார். ஜம்முவின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்து அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலே ட்விட்டரில் அது குறித்த பதிவை உருக்கமாக வெளியிட்டார் சுஷ்மா. அவர் பதிவிட்ட இறுதி பதிவும் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சுஷ்மா ஸ்வராஜூடைய இழப்பு ஈடு செய்ய முடியாது, நாடே வருந்துகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.