பாஜக மூத்தத் தலைவர் சுஷில் குமார் மோடி, டெல்லியில் அக்கட்சியின் உயர்மட்ட தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இந்தச் சந்திப்பில், சமீபத்தில் முடிவடைந்த பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் கிடைத்த வெற்றி குறித்தும், முக்கிய அமைச்சரவை பொறுப்புகளைப் பெறுவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக ஊகிக்கப்படுகிறது.
இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில், பிகாரில் ஆட்சி அமைப்பது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதற்கு முன் பிகார் பாஜக மாநிலத் தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதற்கிடையில், பிகார் துணை முதலமைச்சர் பதவிக்கு காமேஷ்வர் சவுபாலின் பெயர் பரிசீலிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடந்துமுடிந்த பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களையும், காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மெகா கூட்டணி 110 இடங்களையும் வென்றுள்ளன.
இதில், 75 தொகுதிகளில் வெற்றிபெற்று ராஷ்டிரிய ஜனதா தளம் மாநிலத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதே நேரத்தில், 74 இடங்களுடன் பாஜக இரண்டாவது இடத்திலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.