பாட்னா : இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்து, அவரது தந்தை கே.கே.சிங் பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் யாதவுடன் விரிவாகக் கலந்துரையாடினார்.
கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதியன்று, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலுள்ள குடியிருப்பு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் நடிகர் சுஷாந்த் சிங்கின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அவரது மரணம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவத் தொடங்கின.
இதனிடையே, பிகாரில் உள்ள சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் அளித்த புகாரை காவல்துறையினர் முதலில் ஏற்க மறுத்ததாகத் தகவல் வெளியாகியது. பின்னர், இது தொடர்பான தகவல் பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் யாதவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, அவரது தலையீட்டால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நடிகர் சுஷாந்தின் குடும்பத்தினர் கோரியபடி, அவ்வழக்கு மத்தியப் புலனாய்வுத் துறை விசாரணைக்கு அம்மாநில அரசு மாற்றியது. தற்போது அந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு, அமலாக்க இயக்குநரகம், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் ஆகிய மூன்று விசாரணை முகமைகளும் தனித்தனியே கையாண்டு வருகின்றன.
இந்நிலையில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கின் விசாரணை தொடர்பாகவும், அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் நடிகர் சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங் பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருடன் இன்று(செப்.30) விவாதித்தார். இந்த சந்திப்பின்போது, சுஷாந்த் சிங்கின் சகோதரி, மைத்துனரும் அவர்களுடன் இருந்தனர்.
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பான வழக்கில், போதைப்பொருள் சம்பந்தப்பட்டுள்ளதால், வழக்கை விசாரிக்கும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (என்சிபி) இவ்வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தி, அவரது சகோதரர் ஷோயிக், அப்துல் பாசித் பரிஹார், ஜைத் விலாட்ரா, திபேஷ் சாவந்த், சாமுவேல் மிராண்டா உள்ளிட்ட பலரை கைது செய்துள்ளது.
இதுதொடர்பான மேலதிக தகவல்களுக்காக, தீபிகா படுகோனே, சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர், ராகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களையும், என்.சி.பி. விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.