இந்நாள், முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஜனநாயகத்தைச் சீரழித்துவிட்டதாக உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கிடையே, நீதிமன்றத்திற்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி பூஷணின் ட்வீட் குறித்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர். கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் கொண்ட அமர்வு, பிரசாந்த் பூஷண் குற்றவாளி என ஆகஸ்ட் 14ஆம் தேதி தீர்ப்பளித்தது. இது குறித்த தீர்ப்பில், "இந்திய ஜனநாயகத்தின் ஒரு தூணாக மட்டுமின்றி முக்கியத் தூணாக நீதித் துறை விளங்குகிறது. அரசியலமைப்பு ஜனநாயகத்தின் அடித்தளத்தை அசைக்கும் முயற்சிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
பூஷணின் கருத்துகள் பொய்யானவை என்றும் நீதித் துறை மீது மக்களின் மீதான நம்பிக்கை இது கெடுக்கும்" எனக் குறிப்பிடப்பட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுவை தாக்கல்செய்ய பூஷண் திட்டமிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, தனது சீராய்வு மனுவை விசாரிக்கும் வரை தண்டனை குறித்த வாதத்தை ஒத்திவைக்கக்கோரி பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து அவர் தாக்கல்செய்த மனுவில், "ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியிடப்பட்ட தீர்ப்பை முழுவதுமாக ஆராய்ந்த பின்னர், சீ்ராய்வு மனு தாக்கல்செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும். அரசியலமைப்பு வரலாற்றில் குறிப்பாக, கருத்துச் சுதந்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் சட்ட ஆலோசனைகளைப் பெற்றுவருகிறேன்.
உச்ச நீதிமன்ற விதிகளின்படி சீராய்வு மனு தாக்கல்செய்ய 30 நாள்கள் கெடு உள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு, ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறவுள்ள தண்டனை குறித்த விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தண்டனை குறித்த விசாரணை இன்று நடைபெற்றாலும்கூட, சீராய்வு மனுவைத் தாக்கல்செய்யும் வரை தண்டனைக்குத் தடைவிதிக்க முடியும் என பூஷண் தெரிவித்துள்ளார். மேலும், தண்டனையை ஏற்க தயாராக உள்ளதாகவும், மன்னிப்புக் கேட்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "எதன் அடிப்படையில் அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது என்ற விவரங்கள் எனக்கு அளிக்கப்படவில்லை. நீதிமன்றத்தின் நடவடிக்கைகள், தனக்கு அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. கருணையை நான் எதிர்பார்க்கவில்லை, பெருந்தன்மையாக இருக்க வேண்டும் என நான் கூறவில்லை.
எனவே, நீதிமன்றம் வழங்கும் தண்டனையை மகிழ்ச்சியோடு ஏற்பேன் என மகாத்மா காந்தி தெரிவித்ததை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். இக்காலக்கட்டத்தில் நான் பேசவில்லை எனில், எனது கடமையை செய்வதிலிருந்து நான் தோல்வி அடைந்ததாகக் கருதுவேன். எனவே மன்னிப்புக் கோருவதை நான் அவமதிப்பாகக் கருதுகிறேன்" என்றார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 2,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதம் சிறை ஆகியவை தண்டனையாக விதிக்கப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர் உள்பட மூவர் சுட்டுக்கொலை!