மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து (அரசியல் அமைப்பு சட்டம்- 370 பிரிவு) உடனடியாக நீக்கப்படுவதாக நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
இதுகுறித்து பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினரும் அக்கட்சியின் முக்கிய தலைவருமான சுப்பிரமணிய சாமி ட்வீட் செய்துள்ளார். அதில், "நான் கூறியது சரி என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. சட்டப் பிரிவு 370-ஐ நீக்கச் சட்டத் திருத்தம் தேவையில்லை. ஆனாலும் அமித் ஷா இதை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். சட்டப் பிரிவு 370, சட்டப் பிரிவு 35ஏ நீக்கப்பட்டுவிட்டன" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக 2018ஆம் ஆண்டு தனது ட்விட்டர் பக்கத்தில், "சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்ய நாடாளுமன்றத்தின் ஒப்புதல் வேண்டும் என கூறுபவர் அரசியலமைப்பு குறித்து போதுமான புரிதல் இல்லாதவர்கள். அதற்கு அமைச்சரவை தீர்மானத்தின் மீது ஜனாதிபதி அறிவிப்பே போதும்" என்று ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு ட்வீட்டில், "இப்போது காஷ்மீரில் ஐ.நா. சபை தலையிடக் கோரி நேரு தாக்கல் செய்த மனுவை மோடி அரசு திரும்பப் பெற வேண்டும். ஏனெனில் அந்த மனு அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் சட்டவிரோதமாகத் தாக்கல் செய்யப்பட்டது" என்று பதிவிட்டுள்ளார்.