புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள மத்திய அரசுப் பள்ளி நிர்வாகம் ஒன்று, தனது பள்ளியில் பயிலும் 17 மாணவ, மாணவிகளை பள்ளிப் பரிமாற்ற திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு மத்திய பிரதேசத்திலுள்ள பள்ளியில் பயில்வதற்காக அழைத்துச் சென்றது. இதையடுத்து தற்போது கரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவர்களை அங்கிருந்து கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை மீண்டும் புதுச்சேரிக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அம்மாநில அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தனர். அந்தக் கோரிக்கை குறித்து புதுச்சேரி அரசு ஒரு மாதம் வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பெற்றோர்கள் இன்று சம்பந்தப்பட்ட பள்ளியின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊரடங்கு காலத்தில் பெற்றோர்களின் இந்த தர்ணா போராட்டத்தினால் அப்பகுதியில் சற்று சலசலப்பு நிலவியது. தகவலறிந்து அங்கு விரைந்த காவல் துறையினர், மாவட்ட நிர்வாகத்தினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாணவ, மாணவிகளை புதுச்சேரிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: கரோனா நோயாளி குணமாகி வீடு திரும்பினார்- சுகாதாரத் துறை அமைச்சர்