ETV Bharat / bharat

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் வைகோ வாதம் - உச்சநீதிமன்றத்தில் வாதம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைடுக்கு எதிராக போராடிய 13 பேரின் உயிர் தியாகம் நீதி கேட்கிறது என்று உச்சநீதிமன்றத்தில் வாதிட்ட வைகோ, அந்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

வைகோ
author img

By

Published : Feb 7, 2019, 11:29 PM IST

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில், இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வாதத்தில் பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "தூத்துக்குடி போராட்டம் நூறு நாட்கள் அமைதியாக நடைபெற்றது. ஆனால் அறவழியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 13 உயிர்கள் அநியாயமாக பலியாகின. இதுதொடர்பான விசாரணையில், சாட்சியங்களைப் பதிவு செய்து 2400 பக்கங்கள் அடங்கிய ஐந்து தொகுதிகள் அடங்கிய அறிக்கை வெளியானது" என்றார்.

மேலும் பேசிய அவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை குறித்த எனது மேல்முறையீட்டு வழக்குகளும், தமிழ்நாடு அரசின் மேல் முறையீடும் நிலுவையில் இருக்கிறது. பத்து லட்சம் மக்களும் ஆலையை எதிர்க்கிறார்கள். ஏன்? மொத்தத்தில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் எதிர்க்கிறார்கள் என்று கூறினார்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்து செய்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு இந்த உச்சநீதிமன்றத்தில் நீதியரசர்கள் தீர்ப்பளிக்க வேண்டும் என பணிவுடன் வேண்டுகிறேன்" என்று வைகோ உச்சநீதிமன்றத்தில் வாதாடினார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில், இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வாதத்தில் பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "தூத்துக்குடி போராட்டம் நூறு நாட்கள் அமைதியாக நடைபெற்றது. ஆனால் அறவழியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 13 உயிர்கள் அநியாயமாக பலியாகின. இதுதொடர்பான விசாரணையில், சாட்சியங்களைப் பதிவு செய்து 2400 பக்கங்கள் அடங்கிய ஐந்து தொகுதிகள் அடங்கிய அறிக்கை வெளியானது" என்றார்.

மேலும் பேசிய அவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை குறித்த எனது மேல்முறையீட்டு வழக்குகளும், தமிழ்நாடு அரசின் மேல் முறையீடும் நிலுவையில் இருக்கிறது. பத்து லட்சம் மக்களும் ஆலையை எதிர்க்கிறார்கள். ஏன்? மொத்தத்தில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் எதிர்க்கிறார்கள் என்று கூறினார்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்து செய்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு இந்த உச்சநீதிமன்றத்தில் நீதியரசர்கள் தீர்ப்பளிக்க வேண்டும் என பணிவுடன் வேண்டுகிறேன்" என்று வைகோ உச்சநீதிமன்றத்தில் வாதாடினார்.

இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "இன்று 2019 பிப்ரவரி 07 ஆம் தேதி டெல்லி உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரோகிங்டன் பாலி நாரிமன், நவீன் சின்கா இரண்டு நீதிபதிகள் அமர்வில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் கடந்த ஜனவரி 8 ஆம் தேதி நாற்பது நிமிடங்கள் எனக்கு வாதாட வாய்ப்புத் தரவேண்டும் என்று வைகோ கேட்டபோது, நீதிபதி நாரிமன் ஏற்றுக்கொண்டார். அதன்படி இன்று பகல் 12 மணி முதல் 12.40 வரை வைகோ எழுப்பிய வாதம் பின்வருமாறு:

வைகோ: கடந்த 22 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நீதிமன்றங்களிலும், மக்கள் மன்றத்திலும் வன்முறைக்குத் துளியும் இடம் கொடுக்காத வகையில் பலமுறை அறவழியில் போராடி கைது செய்யப்பட்டிருக்கிறேன்.

ஸ்டெர்லைட் வழக்கறிஞர் நண்பர் அரிமா சுந்தரம் அவர்கள், அரசியலுக்காக நடைபெற்ற போராட்டம் என்றும், 2 இலட்சம் பேரை திரட்டுகிறவர்களால் மக்களிடம் ஓட்டு வாங்கி வெற்றிபெற முடியவில்லை என்றும் குறிப்பிட்டார்.

நான் அரசியல்வாதி. நீதிபதிகளிடம் கேட்கிறேன், அரசியலில் இருப்பது பாவமா? மீண்டும் கேட்கிறேன், அது பாவச் செயலா? அல்லது குற்றச் செயலா?

நீதிபதி நாரிமன்: இல்லை.

வைகோ: என்னிடம் நிறைய ஆவணங்கள் இருப்பதாலும், நேரம் குறைவாக இருப்பதாலும் நான் பதட்டமாக இருக்கிறேன்.

நீதிபதி நாரிமன்: நீங்கள் எங்களை அல்லவா பதட்டப்பட வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்? (நீதிமன்றத்தில் சிரிப்பு)

வைகோ: எடுத்த எடுப்பில் மே 22 துப்பாக்கிச் சூட்டைப் பற்றிக் கூற விரும்புகிறேன். 2018 பிப்ரவரி 12 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தூத்துக்குடி வட்டார மக்கள் உண்ணாவிரத அறப்போர் தொடங்கினர். இந்தப் போராட்டம் நூறு நாட்கள் அமைதியாக நடைபெற்றது. நூறாவது நாளான மே 22 இல் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மக்கள் திரண்டு போய் கோரிக்கை மனு கொடுப்பது என்று அறிவிக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றிலும் காவல்துறை 144 தடை உத்தரவு பிறப்பித்தது. குறிப்பிட்ட நாளில் தாய்மார்கள், மீனவர்கள், விவசாயிகள், வணிகர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் என ஒரு இலட்சம் பேர் திரண்டு அமைதியாக முழக்கம் எழுப்பியவாறு மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்துக் கோரிக்கை மனு கொடுக்கச் சென்றனர். தமிழக அரசு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரை தூத்துக்குடியைவிட்டு வெளியேறி கோயில்பட்டி நகரத்துக்குப் போகச்சொல்லிவிட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை என்னுடைய கிராமம் உள்ளடக்கிய நெல்லை மாவட்டத்தின் ஒரு பகுதிதான் தூத்துக்குடியாகும். 22 ஆம் தேதி நடைபெற்ற கோரப் படுகொலையான துப்பாக்கிச் சூடு குறித்து உண்மை கண்டறியும் குழுவினை மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திபேன் அமைத்தார். அந்தக் குழுவில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரிபரந்தாமன், நீதிபதி கோட்கே பாட்டீல், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான தேவசகாயம், கிறிஸ்துதாஸ் காந்தி, ஓய்வு பெற்ற முன்னாள் காவல்துறை உயர் அதிகாரிகளான ஜேக்கப் குன்னோஸ், கமல்குமார், ஸ்ரீகுமார், தடயவியல் நிபுணர் டாக்டர் சேவியர் செல்வா சுரேஷ், வழக்கறிஞர் மாயா சர்வாலா, தடயவியல் அறிஞர் டாக்டர் மதிகரன், சட்ட நிபுணர் டாக்டர் உஷா இராமநாதன், சமூகவியலாளரும் வழக்கறிஞருமான டாக்டர் கல்பனா கண்ணபிரான் ஆகியோர் கொண்ட குழு தூத்துக்குடிக்குச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடங்கள், அதில் பலியாகி உயிரிழந்தோர், காயப்பட்டோர் வீடுகள், வணிகர்கள், மீனவர்கள், விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து ஆய்வு செய்து, சாட்சியங்களைப் பதிவு செய்து 2400 பக்கங்கள் அடங்கிய ஐந்து தொகுதிகள் அடங்கிய அறிக்கை வெளியானது.

உண்மை கண்டறிந்த குழு குறிப்பிடும் அதிர்ச்சி தரத்தக்க உண்மை என்னவென்றால், அறப்போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வருவதற்கு முன்பே காவல்துறையினர் அங்கிருந்த வாகனங்களுக்கு அவர்களே தீ வைத்தனர். இனி எதிர்காலத்தில் எவரும் ஸ்டெர்லைட்டை எதிர்க்கக் கூடாது என்று அச்சுறுத்தி மிரட்டுவதற்காக முன்கூட்டி திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதுதான் இந்தக் கோரப் படுகொலையாகும்.

சுனோலின் என்கின்ற பள்ளி மாணவியின் வாய் வழியாகப் பாய்ந்தத் துப்பாக்கிக் குண்டு, தலையைச் சிதறடித்ததில் மாணவி துடி துடித்து மாண்டாள். அதே போல ஒரு மீனவ சகோதரி திரேஸ்புரம் என்ற இடத்தில் குழந்தைகளுக்கு உணவு கொண்டுபோன போது பத்தடி தூரத்திலிருந்து காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு மூளை சிதறி மண்ணில் விழுந்தார்.

நடைபெற்ற படுகொலை மிகவும் கொடூரமானது ஆகும்.

இந்த நீதிமன்றத்தில் நீரி ஆய்வு மையத்தின் அறிக்கை பற்றி விவாதிக்கப்பட்டது. 1998 இல் புகழ்பெற்ற நீரி நிறுவனத்தின் தலைவர் - தலைசிறந்த சுற்றுச் சூழல் விஞ்ஞானி புருஷோத்தம் கண்ணா அவர்கள் ஸ்டெர்லைட்டைப் பார்வையிட்டுவிட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி லிபரான், நீதிபதி பத்மநாபன் அமர்வில் சாட்சிக் கூண்டில் ஏறி டாக்டர் கண்ணா அவர்கள் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச் சூழலை நாசமாக்குகிறது. இந்த ஆலை நீடிப்பதற்கு எந்த நியாயமும் இல்லை என்றார்.

வெளிநாடுகளில் உயர்ந்த ஊதியத்தில் அவரைப் பணியாற்ற அழைத்தபோதும் இந்தியாவை விட்டு வெளியேற மறுத்த அந்த நிபுணருக்கு பதவி நீட்டிப்பு கொடுக்கப்படவில்லை. காரணங்களை நான் சொல்ல விரும்பவில்லை.

அடுத்த ஆண்டில் 1999 இல் அதே நீரி ஆய்வுக் குழு ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக அறிக்கை தந்தது. 2005 லும், 2011 லும் நீரி நிறுவனம் முரண்பட்ட அறிக்கைகளைத் தந்தது.

இங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும். சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், தூத்துக்குடி மாநகர், சுற்றுவட்டார மக்கள் நலனைக் காக்கவும் சுயநலமின்றி சமரசத்திற்கு இடமின்றி போராடி வருகிறேன். அதனால்தான் சென்னை உயர்நீதிமன்ற அன்றைய தலைமை நீதிபதி லிபரான் அவர்கள் ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையின்போது “வைகோ அவர்களே உங்கள் நேர்மைக்கும், நாணயத்துக்கும் எவரும் நற்சான்றிதழ் தரவேண்டிய அவசியமில்லை. அனைவரும் அறிவார்கள்” என்று பாராட்டிய தகுதியைப் பெற்றேன்.

நீதிபதி நாரிமன்: எங்களுக்கும் தெரியும். அறிவோம்.

வைகோ: ஸ்டெர்லைட் ஆலையில் தாமிரம் உற்பத்தி செய்யப்படும் இடத்தில் அமைந்துள்ள புகைக் குழாய் (சிம்னி) எந்த உயரத்தில் இருக்க வேண்டும் என 1986 இல் மத்திய அரசு வரையரை செய்த சுற்றுச் சூழல் பாதுகாப்பு விதிகள் வகுத்துள்ள விதிமுறையை விவரிக்கிறேன்.

இதன்படி ஸ்டெர்லைட் ஆலை ஒரு நாளைக்கு 391 டன் பயன்படுத்த 60 மீட்டர் உயரம் இருக்க வேண்டும்.

நீதிபதி அவர்களே இது சம்பந்தமாக சுற்றுச் சூழல் நிபுணர்கள் பலரிடம் கேட்டறிந்து இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள தாமிர ஆலைகளை புகை போக்கி உயரங்களின் பட்டியலை இதோ தருகிறேன்.

அனைத்து இடங்களிலும் 100, 105, 150 மீட்டர் உயரம் இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை தற்போது ஒரு நாளைக்கு 1200 டன் பயன்படுத்துகிறது. அதன்படி சிம்னியின் உயரம் 91.5 மீட்டராக இருக்க வேண்டும்.

இப்படி உயரத்தை அதிகப்படுத்தாததால், அதில் வெளியாகும் நச்சுப் புகை மக்கள் உயிருக்கும், உடல்நலனுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.

இங்கே வாதாடிய ஸ்டெர்லைட் வழக்கறிஞர் சுந்தரம் மிகத் தந்திரமாக அங்கு ஸ்டெர்லைட்டின் பல புகைக் குழாய்கள் உள்ளன என்று சொன்னார். அவை சல்பூரிக் அமிலம், பாஸ்பேரிக் அமிலம் தயாராகும் இடத்தில் உள்ள புகைக் குழாய்கள் ஆகும். தாமிரம் உற்பத்தி செய்யும் இடத்தில் ஒரே ஒரு புகைக் குழாய்தான் இருக்கிறது.

பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த நீதிபதி தருண் அகர்வால் குழு விசாணையில் நான் ஸ்டெர்லைட் தரப்பைப் பார்த்து சவால் விட்டேன். சுற்றுச் சூழல் நிபுணர் எவரை வேண்டுமானாலும் இந்தக் குழு ஸ்டெர்லைட்டுக்கு அனுப்பட்டும். ஒரே ஒரு புகைக் குழாய்தான் இருக்கிறது என்ற உண்மையைச் சொல்வார்கள். இந்த புகைக் குழாயிலிருந்து வெளியேறுகிற நச்சுப் புகையில் என்னென்ன உலோகங்கள் எந்த அளவில் உள்ளன என்பதை வேதாந்தா குழுமத்தின் இணையதளத்திலிருந்தே எடுத்திருக்கிறேன். அதனை இதோ சமர்ப்பிக்கிறேன்.

இதில் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய ஆர்சனிக், கார்டுமியம், குரோமியம், நிக்கல் ஆகியவை கலந்துள்ளன. தங்கமும் வெள்ளியும் கலந்திருக்கிறது. அதை மட்டும் பணத்துக்காக பிரித்து எடுத்து விடுவார்கள்.

ஸ்டெர்லைட் ஆலை ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்கிற தாமிர அடர்த்தி மிக மிகத் தரம் குறைந்ததாகும். விலையோ மிகவும் மலிவு. லத்தீன் அமெரிக்க நாடுகளில் தரம் உயர்ந்த தாமிர அடர்த்தி கிடைக்கிறது. ஆனால் விலை அதிகம். அதனால் ஸ்டெர்லைட் ஆலை வாங்காது.

நீதிபதி தருண் அகர்வால் குழு ஸ்டெர்லைட் புகைக் குழாய் குறித்து நான் எடுத்து வைத்த வாதங்களை நான்கு பாராக்களில் குறிப்பிட்டு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு விதிகளை மீறி ஸ்டெர்லைட் இயங்குகிறது. புகைக் குழாய் உயரத்துக்கு ஏற்றவாறு உற்பத்தியைக் குறைக்க வேண்டும் என்று தீர்ப்பு எழுதினார். புகைக் குழாயை உயர்த்த முடியாது. அதற்கு ஒன்றரை வருடங்கள் ஆகும். தாமிர உற்பத்தியையும் குறைக்க மாட்டார்கள். எனவே இத்தனை ஆண்டுகளும் நச்சுப் புகையை வெளியிட்டு மக்களுக்குக் கேடு செய்த குற்றத்துக்காக ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும்.

பசுமை அடர்த்தி (Green Belt)

1994 தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்தபோது, ஆலைக்குள் 250 மீட்டர் அகலம் பசுமைச் சுற்று (Green Belt) இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. அந்த அகலத்தைக் குறைக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலை 1994 ஆகஸ்டு 11 ஆம் தேதி தமிழக அரசுக்கு விண்ணப்பித்தது. அலாவுதீன் அற்புத விளக்கு போல் அதிசயம் நேர்ந்தது. ஏழே நாட்களில் 1994 ஆகஸ்டு 18 ஆம் தேதி 250 மீட்டரை 25 மீட்டராக தமிழக அரசு குறைத்தது. இதன் மர்மம் என்ன?

உச்சநீதிமன்ற நீதிபதி பட்நாயக், நீதிபதி கோகலே அமர்வு 2011 பிப்ரவரியில் ஸ்டெர்லைட் ஆலையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய நீரி குழு செல்வதுடன், அதில் என்னையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியது. நானும் நீரி குழுவுடன் ஸ்டெர்லைட்டுக்குச் சென்றேன். இரண்டாவது அதிசயத்தைக் கண்டேன். ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் பசுமை அடர்த்தியே கிடையாது. வெளியிடங்களிலிருந்து மரங்களையும், செடிகளையும் வேரரோடு பெயர்த்துக்கொண்டுவந்து ஸ்டெர்லைட் ஆலைக்குள் மண்ணில் வேர்களைப் புதைத்து காட்சிப் பொருள் ஆக்கினர்.

நீதிபதி நாரிமன்: அப்படியானால் மூன்றாவது அதிசயம் என்ன?

வைகோ: 2013 மார்ச் 23 அதிகாலையில் ஸ்டெர்லைட் ஆலை நச்சுப் புகையால் நடைபாதைகளில் மக்கள் மயங்கி விழுந்தனர். பூக்களின் நிறம் மாறியது. பூச்செடிகள் கருகின. மரங்களில் இலைகளின் நிறம் மாறியது. அந்தப் புகைப்படங்கள் அடங்கிய ஆவணத்தை இதோ நீதிபதிகளிடம் தருகிறேன்.

தூத்துக்குடி மக்கள் கொதித்து எழுந்தனர். நானும் போராட்டத்தில் கலந்துகொண்டேன். 2013 ஏப்ரல் 2 ஆம் தேதி ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆலையை மூடும் தீர்ப்பு வரும் என்று கருதி தமிழக அரசு மார்ச் 30 ஆம் தேதி ஆலையை மூடியது. ஆனால் உச்சநீதிமன்றம் ஆலை இயங்குவதற்கு தீர்ப்பளித்தது.

தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கக்கூடாது என்று தமிழக அரசு முறையீடு செய்தது. நானும் மேல்முறையீடு செய்தேன். தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதிபதி சொக்கலிங்கம் விசாரித்தார். ஒன்றரை மணி நேரம் நான் வாதங்களை எடுத்து வைத்தேன். ஏப்ரல் 29 ஆம் தேதி தீர்ப்பாயம் கூடியது. நீதிபதி சொக்கலிங்கம் மிகுந்த வருத்தத்துடன், இந்த வழக்கு டெல்லியில் உள்ள பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வுக்கு திடீரென்று மாற்றப்பட்டுவிட்டது. என்ன காரணம் என்று தெரியவில்லை. அதிர்ச்சியாக இருக்கிறது என்றார்.

நீதிபதி அவர்களே, நான் இந்த நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள பசுமைத் தீர்ப்பாய தலைமை அமர்வின் தலைவர் தந்த தீர்ப்பில் இதில் சம்பந்தப்பட்டப் பகுதியை வாசிக்கிறேன்.

“தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் வழக்கை விசாரிப்பதிலிருந்து தானாக விலக்கிகொண்டது” என்று குறிப்பிட்டுள்ளார். இப்பிரப்பிரச்சினையில் இதுதான் மூன்றாவது அதிசயம்.

2018 இல் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வின் தலைவர், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் ஒரு குழுவை அனுப்ப வேண்டும் என்றபோது, ஸ்டெர்லைட் வழக்கறிஞர் சுந்தரம், தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் உயர்நீதிமன்ற அல்லது உச்சநீதிதிமன்ற நீதிபதி எவரையும் அனுப்பக் கூடாது என்று குறிப்பிட்டார்.

அப்படியானால் நான் கேட்கிறேன், தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதிகள் ஒருதலைபட்சமாக தீர்ப்பு அளிப்பார்களா? நீதி தவறுவார்களா? தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதிகள் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் உலகப் புகழ்பெற்ற நீதிபதிகள் ஆவர். உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் அத்தகைய புகழ் குவித்தவர். அவரால் வார்ப்பிக்கப்பட்ட அவரது ஜூனியர் வழக்கறிஞர் நான்.

இங்கே ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை மூடியதால் நாட்டின் பொருளாதாரத்துக்கே வீழ்ச்சி என்றும், பல கோடி நட்டம் என்றும் அங்கலாய்த்தனர். பொருளாதாரத்தைவிட, பணப் புழக்கத்தைவிட மனித உயிர்கள் உன்னதமானவை; பாதுகாக்கப்பட வேண்டியவை. அதனால்தான் இந்திய அரசியல் சட்டத்தை அமைத்தபோது முகப்புரையில் (Preamble) இந்திய நாட்டு மக்களுக்கு நீதியும், சுதந்திரமும், சமத்துவமும், சகோதரத்துவமும் வழங்குவதற்கு இறையாண்மை உள்ள மதச்சார்பற்ற ஜனநாயக் குடியரசாக 1948 நவம்பர் 26 ஆம் நாள் இந்திய மக்களுக்கு அரசியல் சட்டத்தை அமைக்கிறோம். அரசியல் சட்டத்தின் 21 ஆவது பிரிவு மனித உயிர்களுக்கு உத்தரவாதம் தருகிறது. அரசியல் சட்டத்தின் 48A பிரிவு சுற்றுச் சூழலைப் பாதுகாக்கிறது.

மக்களுக்காகத்தான் சட்டம். சட்டத்திற்காக மக்கள் அல்ல.

ஆலை மூடியதால் நஷ்டம் ஏற்பட்டது என்று இங்கே கூறினார்களே, மராட்டிய மாநிலத்தில் இரத்தினகிரி மாவட்டத்தில் அரசு அனுமதி வாங்கி அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை இரத்தினகிரி மாவட்ட விவசாயிகள் சம்மட்டிகளோடும், கடப்பாறைகளோடும் வந்து அடித்து நொறுக்கினார்களே! மறுநாள் மராட்டிய மாநில அரசு லைசென்சை இரத்து செய்ததே! ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஏன் மும்பை உயர்நீதிமன்றத்திலோ, டெல்லி உச்சநீதிமன்றத்திலே மராட்டிய அரசின் நடவடிக்கையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை?

2013 முதல் 2018 மே 22 வரை தமிழ்நாடு அரசும், மாசுக் கட்டுபபாட்டு வாரியமும் ஸ்டெர்லைட் ஆலை விதிமீறல்கள் எதனையும் கண்டுகொள்ளவில்லை. மாறாக ஆலைக்கு ஆதரவாகவே தொடர்ந்து செயல்பட்டது.

ஆலை புகை போக்கியின் உயரம் குறித்த பிரச்சினையை நான் தான் முதன் முதலில் ஆய்வுக் குழுவில் கொண்டு வந்தேன்.

2013 இல் ஆலையைத் திறக்க வேண்டும் என்ற பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இரண்டு மேல்முறையீடு வழக்குத் தொடுத்தேன். தமிழ்நாடு அரசும் கண்துடைப்புக்காக ஒரு மேல்முறையீடு செய்தது.

நீதிபதி அவர்களே, இத்தனை அமர்வுகள் நடந்ததே, ஒரு அமர்விலாவது 2013 மேல் முறையீடு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்று தமிழக அரசு வழக்கறிஞரோ, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வழக்கறிஞர்களோ குறிப்பிட்டாரா? என்றால் கிடையாது. ஜனவரி 8 ஆம் தேதி அமர்வில் நான்தான் உங்களிடம் குறிப்பிட்டேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை குறித்த எனது மேல்முறையீட்டு வழக்குகளும், தமிழ்நாடு அரசின் மேல் முறையீடும் நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று நான் விடுத்த கோரிக்கையை கனிவோடு ஏற்றுக்கொண்டு இந்த வழக்கில் சேர்த்தீர்கள் மிக்க நன்றி.

தமிழ்நாட்டில், தூத்துக்குடியில் எங்கள் தலையில் எமனாக வந்து உட்கார்ந்துகொண்டது. பத்து இலட்சம் மக்களும் ஆலையை எதிர்க்கிறார்கள். ஏன்? மொத்தத்தில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் எதிர்க்கிறார்கள்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை இரத்து செய்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு இந்த உச்சநீதிமன்றத்தில் நீதியரசர்கள் தீர்ப்பளிக்க வேண்டும் என பணிவுடன் வேண்டுகிறேன்" என்று வைகோ வாதடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.