கடந்த ஐந்து மாதங்களாக இந்திய-சீன நாடுகளுக்கிடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்கள் மோதிக் கொண்டதில், இந்தியாவைச் சேர்ந்த 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே பல்வேறு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பலகட்டங்களில் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், அதனை பொதுவெளியில் வெளிப்படையாக தெரிவிக்க முடியாது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "இரு நாடுகளுக்கிடையே எல்லை சச்சரவுகளை தீர்க்கும் வகையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் அதனை வெளிப்படையாக பொதுவெளியில் சொல்ல முடியாது.
எல்லைப் பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டாலும், சமீபத்தில் நடந்த மோதலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை" என்றார்.
லடாக்கில் நடைபெற்ற சம்பவங்களுக்கும் திபெத் பிரச்னைக்கும் சம்மந்தம் உண்டா என்ற கேள்விக்கு, "அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 1993ஆம் ஆண்டிலிருந்து இந்திய சீன நாடுகளுக்கிடையே அமைதியை நிலைநாட்டும் வகையில் பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளன. கடந்த 20 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என பதிலளித்துள்ளார்.