ஆந்திராவின் விஜயவாடாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் கரோனா தடுப்பு பாதுகாப்பில் இருந்த செவிலி ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதிசெய்தனர்.
இதையடுத்து, அவருக்கு அங்குள்ள கரோனா சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விஜயவாடா நகரில் உள்ள இரண்டு காவல் நிலையங்களில் பணிபுரிந்த அலுவலர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
கிருஷ்ணா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 177 கரோனா வழக்குகளில், 150 வழக்குகள் விஜயவாடா நகரத்தைச் சேர்ந்தவர்கள். கரோனா தொற்று தீவிரமாக பரவிவருவதால் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இம்தியாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மாநில அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
மேலும், குணமடைந்த பின்னர் மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட கரோனா நோயாளிகளுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்குவதாகவும் முதலமைச்சர் அறிவித்தார். இதுவரை மாநிலத்தில் 231 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனாவிலிருந்து விடுபட என்ன செய்யவேண்டும்...? - மருத்துவர் ரவிகுமார்