கோவிட்-19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் சர்வதேச விமான சேவைகளுக்குத் தடை விதித்தன. இந்தியாவும் மார்ச் இறுதி வாரம் முதல் சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை விதித்தது. வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்டுவர இயக்கப்படும் சிறப்பு விமானங்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டது.
இந்நிலையில், வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை 200 சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்துவந்துள்ளதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு 111 சிறப்பு விமானங்களை இயக்கியுள்ளோம். இதன் மூலம் சுமார் 20 ஆயிரம் இந்தியர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
அதேபோல சவூதி அரேபியா, ஓமன், கத்தார், லெபனான், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும் சுமார் 50 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டில் சிக்கித் தவித்த இந்தியர்கள் நாடு திரும்பவும், அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் ஒன்றிணைக்கும் வகையிலும் சுமார் 200 சிறப்பு விமானங்களை ஸ்பைஸ் ஜெட் இயக்கியுள்ளது. இதன் மூலம் சுமார் 30,000 இந்தியர்கள் வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்பியுள்ளனர்" என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை மே இறுதி வாரத்தில் தொடங்கப்பட்டுள்ளபோதும், சர்வதேச விமானங்கள் ஜூலை 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, உள்நாட்டு விமான சேவை 55 விழுக்காடாக அதிகரிக்கும்போது சர்வதேச விமான சேவையை தொடங்குவது குறித்து சிந்திக்கலாம் என்று விமான துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மோசமாகும் கரோனா பாதிப்பு: தொழிலாளர்கள் மீள்வது கடினம் - சர்வதேச தொழிலாளர் அமைப்பு!