சில நாள்களுக்கு முன்பு ஸ்பைஸ்ஜெட் நிர்வாகத்திற்குச் சொந்தமான டெல்லி - கொல்கத்தா விமானத்தில் கூடுதல் உறுப்பினராக பைலட் ஒருவர் ஏறியுள்ளார். பின்னர், அவர் விமானத்தில் பணிபுரியும் பெண் அருகில் அமர்ந்துள்ளார்.
பயணம் தொடங்கிய சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் அநாகரிகமான செயலில் ஈடுபட்டுள்ளனர். இதைப் பார்த்த சகப்பயணிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் நிர்வாகத்திற்குப் பயணிகள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்திய ஸ்பைஸ்ஜெட் நிர்வாகத்தினர், அவர்கள் இருவரையும் பணிநீக்கம் செய்துள்ளனர்.
இது குறித்து நிர்வாகம் தங்கள் குழுவினருக்கு வெளியிட்ட அறிக்கையில், "தனிப்பட்ட அணுகுமுறையால் நிறுவனத்தின் நற்பெயருக்கு பங்கம் விளையும். இதனால் சக ஊழியர்களை மனச்சோர்வடைய செய்யலாம். கடுமையான விளைவுகளும் ஏற்படக்கூடும்.
அவர்கள் இருவரும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு முக்கியத்துவமளித்து பணியிடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை மறந்துவிட்டனர். இதன் காரணமாகவே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.