வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சொந்த ஊர்களுக்கு அழைத்து வரப்படுகின்றனர். அதன்படி, இதுவரை இந்த திட்டத்தின் கீழ் இயக்கப்பட்ட விமானங்களில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று (செப்டம்பர் 10) வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஃபிலிப்பைன்ஸின் செபுவிலிருந்து சென்னைக்கு வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் 160 இந்தியர்கள் தாயகம் தரும்பியுள்ளனர். இதுமட்டுமின்றி வரும் நாளை மறுநாள் (செப்டம்பர் 12) இயக்கப்படும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இந்தியாவில் கல்லீரல் சிகிச்சை மேற்கொள்ளும் மூன்று ஃபிலிப்பைன்ஸ் நாட்டினரையும் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஃபிலிப்பைன்ஸில் உள்ள இந்திய தூதர் ஷம்பு எஸ்.குமாரன் கூறுகையில், "செபுவிலிருந்து சென்னைக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் இயக்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். செபுவிலிருந்து ஹைதராபாத் மற்றும் அகமதாபாத்திற்கு செப்டம்பர் 12ஆம் தேதி விமானம் இயக்கப்படுகிறது. மனிதாபிமான அடிப்படையில் தூதரகத்தின் வேண்டுகோளை ஏற்று, கல்லீரல் மாற்று சிகிச்சைக்கு வரும் குழந்தை, நன்கொடையாளர் மற்றும் குடும்பத்தினரை இலவசமாக அழைத்து செல்ல ஒப்புக்கொண்ட ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் தெரிவிக்கிறேன்" என்றார்.