நாட்டின் நிதிநிலை அறிக்கையினை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று தாக்கல்செய்தார். இதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு அளிக்கு சிறப்பு பாதுகாப்பு குழுவினருக்கு (எஸ்பிஜி) ரூ.600 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
இது கடந்தாண்டு ரூ.540 கோடியாக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டு ரூ.420 கோடியாக இருந்தது. தற்போது ரூ.600 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமருக்குப் பாதுகாப்பு அளிக்கும் சிறப்புப் பாதுகாப்புக் குழுவில் மூவாயிரம் வீரர்கள் உள்ளனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்புப் பாதுகாப்புக் குழுவினரின் பாதுகாப்பு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதேபோல் முன்னாள் பிரதமர்களான ஹெச்.டி. தேவகவுடா, வி.பி. சிங் ஆகியோரின் பாதுகாப்பும் ஏற்கனவே விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, ராபர்ட் வத்ரா ஆகியோருக்கு அளிக்கப்பட்டுவந்த உயர்தர பாதுகாப்பும் மாற்றியமைக்கப்பட்டது.
1985ஆம் ஆண்டு இந்திரா காந்தியின் படுகொலைக்கு பின்னர் பிரதமருக்கு சிறப்புப் பாதுகாப்புக் குழுவினரின் பாதுகாப்பு அவசியம் என உணரப்பட்டது. இந்த நிலையில் 1991ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார்.
இதையடுத்து பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும்வகையில் சிறப்புப் பாதுகாப்புக் குழு உருவாக்கப்பட்டது. ராஜிவின் படுகொலைக்குப் பின்னர் அவரது குடும்பம் முழுவதுமாகச் சிறப்புப் பாதுகாப்புக் குழுவினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது முன்னாள் பிரதமர்களான பி.வி. நரசிம்ம ராவ், ஹெச்.டி. தேவகவுடா, ஐ.கே. குஜ்ரால் ஆகியோரின் எஸ்.பி.ஜி. பாதுகாப்புக் குழு மாற்றியமைக்கப்பட்டது. எனினும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு, 2018ஆம் ஆண்டு அவர் மரணிக்கும் வரை இந்தப் பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: நிர்பயா வழக்கு: மத்திய அரசின் மனு மீதான விசாரணை தொடக்கம்